21-வது காமன்வெல்த் விளையாட்டு திருவிழா ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் காரரா ஸ்டேடியத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு கோலாகலமாக தொடங்குகிறது. இந்தியாவில் இருந்து 218 வீரர், வீராங்கனைகள் களம் இறங்குகிறார்கள். 71 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்திய அணி சார்பாக காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கள் நடக்க இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு 15 பேர் இந்திய அணியின் அதிகாரிகளாக செல்ல மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்து இருந்தது. பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் தந்தை ஹர்விர் சிங், பி.வி.சிந்துவின் தாயார் விஜயாவும் அதிகாரிகளாக செல்கின்றனர். ஆனால் அவர்கள் தங்களது பயணத்துக்கு ஆகும் அனைத்து செலவுகளையும் தாங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது.
ஆனால், இந்திய அணியினருடன் சென்றுள்ள சாய்னாவின் தந்தை ஹர்விர்சிங்குக்கு அதிகாரிகளுக்குரிய அடையாள அட்டை மற்றும் வீரர்கள் தங்கும் விளையாட்டு கிராமத்திற்குள் நுழைய அனுமதி கிடைக்கவில்லை.
இந்தநிலையில் சாய்னா நேவால் ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் பதிவிட்டதாவது "காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக நாங்கள் புறப்படுகையில் எனது தந்தையின் பெயர் அணியின் அதிகாரிகள் பட்டியலில் இடம் பெற்று இருந்தது. அதற்குரிய செலவு தொகையையும் வழங்கி இருந்தோம். ஆனால் விளையாட்டு கிராமத்துக்கு வந்த பிறகு அணியின் அதிகாரிகள் பட்டியலில் இருந்து எனது தந்தையின் பெயர் நீக்கம் செய்யப்பட்டது அதிர்ச்சியாக உள்ளது.
அவர் என்னுடன் தங்க முடியாது. எனது போட்டியை பார்க்க நேரில் வர முடியாது. விளையாட்டு கிராமத்தில் கூட நுழைய முடியாது என்ற நிலைமை எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. என் தந்தைக்கு அனுமதி இல்லை என்றால் அவர் எப்படி என்னை சந்திக்க முடியும். போட்டி நடக்கும் போது எனக்கு ஆதரவாக என் தந்தை எப்படி இருக்க முடியும். இதனை என்னிடம் முன்பே தெரிவிக்காதது ஏன்? என்பது எனக்கு புரியவில்லை’"என்று காட்டமாக பதிவிட்டு இருந்தார்.
விஷயத்தை அறிந்த இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் காமன்வெல்த் விளையாட்டு அமைப்பு குழு அதிகாரிகளை தொடர்பு கொண்டு சாய்னாவின் தந்தை ஹர்விர் சிங்க்கிற்கு அதிகாரிகளுக்கான அடையாள அட்டை வழங்கவும், விளையாட்டு கிராமத்தில் தங்கவும் பின்னர் அனுமதி பெற்று கொடுத்தனர்.
தனது வேண்டுகோளை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு சாய்னா நேவால் டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்து நிம்மதி பெறு மூச்சி அடைந்தார்.
கடந்த ஆண்டு வெளியான ஹிந்தி திரைப்படமான "தங்கல்" பாணியில் ஒரு சம்பவம் மீண்டும் பிரபல விளையாட்டு வீராங்கனையின் தந்தைக்கு ஏற்பட்டது நாடு முழுவதும் தீயாய் பரவிக்கொண்டு இருக்கிறது.