பாகிஸ்தானில் பல மாதங்கள் கழித்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடந்துள்ளது.
இது குறித்து மேற்கிந்தியத் தீவுகள் அணி புகழாரம் சூட்டியுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட மார்ச் இறுதியில் பாகிஸ்தான் விரைந்தது. ஏப்ரல் 1,2 மற்றும் 3-ம் தேதிகளில் மூன்று போட்டிகளும் நடந்தன.
அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியே வெற்றி பெற்றது. தோல்வியடைந்தபோதும் மேற்கிந்தியத் தீவுகள் அணி, இந்தத் தொடர் மூலம் பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படலாம் என்பது நீருபணமாகியுள்ளது என்று பெருமிதத்தோடு தெரிவித்துள்ளது.
தொடர் முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பயிற்சியாளர் ஸ்டுவர்ட் லா, `பாகிஸ்தானில் எப்படியெல்லாம் நெருக்கடி வரலாம் என்று முன்கூட்டியே பலரால் எங்களுக்கு சொல்லப்பட்டது. ஆனால், பாதுகாப்பு வசதிகள் மிக அதிகமாகவே செய்யப்பட்டிருந்தன.
எனவே, இங்கு மீண்டும் கிரிக்கெட் விளையாடலாம் என்ற தன்னம்பிக்கை தானாகவே வந்துவிடுகிறது. தொடரில் நாங்கள் படுதோல்வி அடைந்தது வருத்தமளிக்கிறது. ஆனால், பாகிஸ்தானில் மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியும் என்பதை இந்தத் தொடர் மூலம் நிரூபித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.