மும்பையில் உள்ள ஒரு கிளப்பில் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை மும்பை போலீஸ் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா விதிமுறைகளை மீறி விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தியாவிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று இரவு முதல் இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுகிறது. இதற்கிடையே நேற்று இரவு லண்டனில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் பயணம் செய்த 5 பயணிகளுக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இன்று இரவு முதல் மகாராஷ்டிரா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு மும்பை விமான நிலையம் அருகே உள்ள ஒரு நடத்திர கிளப்பில் ஒரு விருந்து நிகழ்ச்சி நடைபெறுவதாகவும், இதில் கொரோனா விதிமுறைகளை மீறி ஏராளமானோர் கலந்து கொள்வதாகவும் மும்பை போலீசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று நடத்திய விசாரணையில் தகவல் உண்மை எனத் தெரிய வந்தது. போலீசார் அந்த கிளப்புக்குள் சென்று நடத்திய சோதனையில் அங்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பிரபல இந்தி பாடகர் குரு ரன்தாவா, பிரபல பாலிவுட் நடிகர் ஹ்ருத்விக் ரோஷனின் முன்னாள் மனைவி சூசெய்ன் கான் உள்பட ஏராளமானோர் அந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுரேஷ் ரெய்னா உட்பட 34 பேரையும், 7 கிளப் ஊழியர்களையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் ரெய்னா உட்பட அனைவரையும் போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது.