`பஞ்சாப் அணி, இம்முறை நன்றாக விளையாடும். குறிப்பாக அஷ்வின் தலைமை மிகப் பெரிய மாற்றத்தை ஏறபடுத்தும்’ என்று கூறியுள்ளார் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான வீரேந்திர சேவாக்.
இந்திய சுழற்பந்து வீச்சாளராகவும் சென்னை சூப்பர் கிங்ஸின் அங்கமாகவும் இருந்தவர் ரவிசந்தர் அஷ்வின். இம்முறை அவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்து கேப்டன் பொறுப்பையும் சேர்த்து வழங்கியுள்ளது. கேப்டன் பொறுப்பை தனக்கு கொடுக்கப்பட்டதை உற்சாகத்துடன் நோக்கியுள்ளார் அஷ்வின்.
அவருக்கு பஞ்சாப் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரும் முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரருமான வீரேந்திர சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார். அஷ்வின் குறித்து சேவாக் பேசுகையில், `அஷ்வின், புத்திசாலித்தனமான கிரிக்கெட் வீரர். அவர் தான், பஞ்சாப் அணியை வழிநடத்த சரியான தேர்வு என்று நாங்கள் நம்புகிறோம்.
எனக்கும், ஒரு பௌலர் கேப்டனாக இருக்க வேண்டும் என்பதில் முழு உடன்பாடு இருக்கிறது. கபில் தேவ், இம்ரான் கான், வக்கார் யூனிஸ் போன்றோர்கள் அவர்களைச் சார்ந்த அணிகளுக்கு பல வெற்றிகளை தேடித் தந்திருக்கின்றனர். அதைப் போலவே அஷ்வினும் பஞ்சாப் அணிக்கு தேடுத் தருவார்’ என்று நம்பிக்கை ததும்ப தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்-ன் இரண்டாவது போட்டி, பஞ்சாப்புக்கும் டெல்லிக்கும் இடையில் நடைபெற்றது. இதில், பஞ்சாப் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.