ஆஸ்திரேலியாவில் கொரோனா விதிமுறைகளை மீறி ஓட்டலில் சென்று சாப்பிட்டதாக ரோகித் சர்மா உள்பட 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது புகார் கூறப்பட்ட நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் பாண்ட்யா இருவரும் விதிமுறைகளை மீறி ஓட்டலை விட்டு வெளியே சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான புகைப்படங்களை ஒரு ஆஸ்திரேலிய பத்திரிகை வெளியிட்டுள்ளது. உலகில் கொரோனா பரவல் குறைவாக இருக்கும் நாடுகளில் ஒன்று ஆஸ்திரேலியா. இங்கு கொரானோ வழிகாட்டுதல் நெறிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுவது தான் இதற்கு முக்கிய காரணமாகும். எவ்வளவு முக்கிய பிரமுகராக இருந்தாலும் ஆஸ்திரேலியா சென்றால் அங்குள்ள விதிமுறைகளை பின்பற்றித் தான் ஆக வேண்டும்.
ஆஸ்திரேலியா சென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் 14 நாள் தனிமையில் இருந்த பின்னரே விளையாட அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய கிரிக்கெட் வீரர்களான ரோகித் சர்மா, சுப்மான் கில், நவ்தீப் செய்னி, ரிஷப் பந்த், பிரித்வி ஷா ஆகியோர் விதிமுறைகளை மீறி அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர்கள் யாரும் முக கவசமும் அணிந்திருக்கவில்லை. இதையடுத்து இவர்கள் 5 பேரும் தனிமைப்படுத்தப் பட்டனர். தொடர்ந்து 5 பேருக்கும் இன்று கொரானோ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா இல்லை என தெரியவந்ததால் 7ம் தேதி தொடங்க உள்ள 3வது டெஸ்ட் போட்டியில் அனைவருக்கும் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இந்திய கேப்டன் விராட் கோஹ்லியும், ஹர்திக் பாண்ட்யாவும் கடந்த சில வாரங்களுக்கு முன் கொரோனா விதிமுறைகளை மீறி பேபி ஷாப் என்ற கடைக்கு சென்றது தெரியவந்துள்ளது. டி20 போட்டித் தொடர் நடந்து கொண்டிருந்த போது கடந்த டிசம்பர் 7ம் தேதி இவர்கள் இருவரும் சிட்னியில் உள்ள இந்த கடைக்கு சென்றனர். மேலும் அவர்கள் கடை ஊழியர்களுடன் ஏராளமான போட்டோக்களும் எடுத்துள்ளனர். இந்த தகவல் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மார்னிங் ஹெரால்ட் என்ற பத்திரிகையில் புகைப்படத்துடன் வெளியாகி உள்ளது. கோஹ்லியும், பாண்ட்யாவும் முக கவசம் அணியாமல் கடை ஊழியர்களுடன் எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.