முஷ்டாக் அலி டிராபிக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் பலம் வாய்ந்த மும்பையை கேரளா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. கேரள அணியில் முகமது அசாருதீன் 37 பந்தில் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அவர் 137 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.கொரோனா பரவல் காரணமாகப் பல மாதங்களாக இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தான் சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கின.
இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளையும் தொடங்க இந்திய கிரிக்கெட் வாரியம் தீர்மானித்தது. இதன்படி முஷ்டாக் அலி டிராபிக்கான டி 20 போட்டி தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போட்டியில் பலம் வாய்ந்த மும்பை அணியைக் கேரளா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. டாசில் வெற்றி பெற்ற கேரளா முதலில் பீல்டிங் செய்யத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய மும்பை அணி அதிரடியாக ஆடி ரன்களை குவித்தது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் பெரும்பாலான வீரர்களும் சிறப்பாக ஆடினர்.
31 பந்துகளில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்சர் உட்பட 42 ரன்கள் எடுத்த ஆதித்ய தாரே தான் மும்பை அணியின் டாப் ஸ்காரர் ஆவார். தொடக்க ஆட்டக்காரர் யஸ்வஸ்வி ஜெய்ஸ்வால் 32 பந்துகளில் 40 ரன்களும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில் 38 ரன்களும், சித்தேஷ் லாட் 12 பந்துகளில் 20 ரன்களும் எடுத்தனர். பலம் வாய்ந்த மும்பை அணியின் பந்துவீச்சைக் கேரள அணி தாக்குப் பிடிக்காது என்றே அனைவரும் கருதினர். ஆனால் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ராபின் உத்தப்பாவும், முகமது அசாருதீனும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். இவர்கள் இருவரும் 57 பந்துகளில் முதல் விக்கெட்டுக்கு 129 ரன்கள் குவித்தனர்.
உத்தப்பா ஆட்டமிழந்த பின்னர் அசாருதீனுடன் கேப்டன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து 28 பந்துகளில் 66 ரன்கள் குவித்தனர். அசாருதீன் 37 பந்தில் சதம் அடித்தார். இறுதியில் கேரளா 25 பந்துகளை மீதம் வைத்து 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. முகம்மது அசாருதீன் 137 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேரள அணி சார்பில் முதன்முதலாக ஒரு வீரர் சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ஆட்டத்தைப் பாராட்டி ஒரு ரன்னுக்கு ₹ 1000 என்ற அடிப்படையில் கேரள கிரிக்கெட் வாரியம் அசாருதீனுக்கு 1 லட்சத்து 37 ஆயிரம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.