மும்பையில் தன்னுடைய ஊர் மக்கள் அளித்த வரவேற்பு விழாவில் கங்காரு உருவத்துடன் அமைக்கப்பட்ட கேக்கை இந்திய கேப்டன் ரகானே வெட்ட மறுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.ஆஸ்திரேலிய மண்ணில் அந்நாட்டு அணியை மண்ணை கவ்வ வைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பார்டர்- கவாஸ்கர் வெற்றிக் கோப்பையுடன் நேற்று இந்திய வீரர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு வந்தடைந்தனர். இந்திய வீரர்களுக்கு அவர்களது ஊர்களில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக வீரர் நடராஜனுக்கு அவரது சொந்த ஊரில் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் அவர் அழைத்து செல்லப்பட்டார். இதேபோல அனைத்து வீரர்களுக்கும் அவர்களது சொந்த ஊர்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்தியா பிரமாண்ட வெற்றிபெற உறுதுணையாக இருந்த கேப்டன் ரகானேவுக்கும் அவரது சொந்த ஊரில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது அப்பகுதியினர் ஒரு கேக்கை வெட்ட வேண்டும் என்று கூறினர். அதற்கு ரகானேவும் சம்மதித்தார்.
கத்தியை எடுத்து கேக்கை வெட்ட முயன்ற போது தான் அந்த கேக்கின் மேல் ஒரு கங்காருவின் உருவம் இருந்ததைத் தற்செயலாக ரகானே கவனித்தார். கங்காரு ஆஸ்திரேலியாவின் தேசிய மிருகம் ஆகும். ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்ததற்காக அந்த கேக்கில் கங்காருவின் உருவம் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த கேக்கை தன்னால் வெட்ட முடியாது என்று ரகானே கூறினார். தொடர்ந்து கங்காருவை கேக்கில் இருந்து அப்புறப்படுத்திய பின்னரே அவர் கேக்கை வெட்டினார். ரகானேவின் இந்த செயல் சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே மிகவும் அமைதியான கூல் கேப்டன் என்று ரகானேவுக்கு ஒரு பெயர் உண்டு. பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் லியோனுக்கு 100வது போட்டியாகும்.
பார்டர்- கவாஸ்கர் கோப்பையை பெறுவதற்கு முன் 100 போட்டியில் விளையாடிய லியோனை கவுரவிக்கும் வகையில் ரகானே அவரை அழைத்து, தான் கையெழுத்துப் போட்ட இந்திய அணியின் ஜெர்சியை வழங்கியது அனைவராலும் பாராட்டப்பட்டது. லியோன் உள்பட ஆஸ்திரேலியர்கள் யாரும் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியாவை கவுரவிக்கும் வகையில் ரகானே மீண்டும் நடந்து கொண்டது சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.