கணவர் சோயப் மாலிக்குக்கு சானியா மிர்சா இன்ஸ்டாகிராமில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், நீங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையாக இருப்பவர் சானியா மிர்சா. விம்பிள்டன், ஆஸ்திரேலிய ஓபன் ஒலிம்பிக் உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்துள்ள சானியா மிர்சாவுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்குக்கும் கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரலில் திருமணம் நடந்தது.
திருமணமாகி 8 வருடங்களுக்குப் பின்னர் தான் சானியாவுக்கு குழந்தை பிறந்தது. அதற்கு முன்பு வரை இவர் டென்னிஸ் விளையாட்டில் இவர் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். குழந்தை பிறந்த பின்னர் சிறிது காலம் இவர் விளையாட்டிலிருந்து ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த வருடம் முதல் சானியா மிர்சா மீண்டும் டென்னிஸ் விளையாட தொடங்கியுள்ளார். இந்நிலையில் சானியாவின் கணவர் சோயப் மாலிக்குக்கு இன்று 39வது பிறந்த நாளாகும். தற்போது இவர் பாகிஸ்தானில் கிரிக்கெட் பயிற்சி முகாமில் உள்ளார்.
தனது கணவர் சோயப் மாலிக்குக்கு சானியா மிர்சா டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது: நீங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. உங்களுக்கு என்னுடைய மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். காதலும், புன்னகையும் வெற்றிகளும் நிறைந்ததாக உங்கள் நாட்கள் அமையட்டும். நீங்கள் பயிற்சி முடிந்து திரும்பிய பின்னர் நான் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியிருக்கலாம். ஆனால் இன்ஸ்டாகிராமில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிக்காவிட்டால் அதையும் சிலர் குறை கூறுவார்கள். இவ்வாறு சானிய மிர்சா தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.