கேப்டன் ஜோ ரூட்டின் அபார சதத்தால் சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் குவித்துள்ளது. சிப்லி 87 ரன்களில் ஆட்டமிழந்தார்.இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் புதிதாக இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஷஹ்பாஷ் நதீம் இடம் பெற்றார். காயமடைந்த அக்சர் படேலுக்கு பதிலாக இவர் சேர்க்கப்பட்டார்.
இதே போல காயம் குணமடைந்த இஷாந்த் சர்மாவும் அணியில் இடம் பிடித்தார். இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோசப் பர்ன்சும், சிப்லியும் களமிறங்கினர். இருவரும் மிக நிதானமாகவும், கவனமாகவும் இந்திய பந்து வீச்சை எதிர்கொண்டனர். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 63ல் இருந்த போது அஷ்வினின் பந்து வீச்சில் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து பர்ன்ஸ் ஆட்டமிழந்தார். இவருக்குப் பின் களமிறங்கிய டேன் லாரன்ஸ் வந்த வேகத்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் பும்ராவின் பந்தில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து 63 ரன்களில் இங்கிலாந்து அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
இதன்பிறகு சிப்லியுடன் கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இருவரும் மிகச்சிறப்பாக இந்திய பந்து வீச்சை எதிர்கொண்டு ரன்களை குவிக்க தொடங்கினர். அற்புதமாக ஆடிய ஜோ ரூட் 164 பந்துகளில் 12 பவுண்டரிகள் உதவியுடன் சதத்தை எட்டினார். ஜோ ரூட் தன்னுடைய 100வது டெஸ்டில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதேபோல சிப்லியும் இன்று மிகச் சிறப்பாக ஆடினார். இவர் 87 ரன்களில் பும்ராவின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இருவரும் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தனர். இன்று ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ரன்கள் சேர்த்துள்ளது. ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 128 ரன்களுடன் களத்தில் உள்ளார். இன்று கடைசி ஓவரில் மூன்று பந்துகள் மட்டுமே மீதம் இருந்த நிலையில் 3வது விக்கெட் போனதால் அத்துடன் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.