சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து இன்று ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 555 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் ஜோ ரூட் அற்புதமாக ஆடி இரட்டை சதம் அடித்தார்.சென்னை முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தற்போது மிக வலுவான நிலையில் உள்ளது. டாசில் வெற்றிபெற்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்தது. முதல் நாளிலேயே அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் சதம் அடித்தார்.
இந்நிலையில் இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. நேற்றைய சிறப்பான ஆட்டத்தை ஜோ ரூட் இன்றும் தொடர்ந்தார். அற்புதமாக ஆடிய அவர் இரட்டை சதம் அடித்து உலக சாதனை புரிந்தார். 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. இது தவிர மேலும் பல சாதனைகளை அவர் புரிந்தார். இறுதியில் 218 ரன்கள் எடுத்திருந்த போது ஷஹ்பாஸ் நதீமின் பந்தில் அவர் ஆட்டமிழந்தார்.இன்று ஜோ ரூட்டுடன் சேர்ந்து சிறப்பாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் 82 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு ஒல்லி போப் 34 ரன்களிலும், ஜோஸ் பட்லர் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இன்று ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 555 ரன்கள் குவித்துள்ளது. டோம் பெஸ் 28 ரன்களுடனும், ஜேக் லீச் 6 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருக்கின்றனர். இரண்டு நாள் ஆட்டங்களிலும் இந்திய அணியின் பந்துவீச்சு அவ்வளவாக எடுபடவில்லை என்றே கூறவேண்டும். இந்திய தரப்பில் இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, அஷ்வின் மற்றும் ஷஹ்பாஸ் நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.