சென்னை டெஸ்டில் இங்கிலாந்து 578 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது. சென்னை டெஸ்ட் போட்டியில் தற்போதைய சூழ்நிலையில் இங்கிலாந்தின் கை மிகவும் ஓங்கியிருக்கிறது. முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ரன்கள் சேர்த்தது. முதல் நாளிலேயே இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் சதம் அடித்தார். நேற்றைய 2வது நாள் ஆட்டத்திலும் சிறப்பாக ஆடி அவர் இரட்டை சதம் அடித்தார்.
இதன் மூலம் 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். நேற்று அவர் 218 ரன்களில் ஆட்டம் இழந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 555 ரன்கள் குவித்திருந்தது. பெஸ் 28 ரன்களுடனும், லீச் 6 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருந்தனர். இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கியது. தொடக்கத்திலேயே புதிய பந்து எடுக்கப்பட்டது. புதிய பந்தில் பும்ரா வீசிய முதல் பந்திலேயே பெஸ் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஆண்டர்சன் களமிறங்கினார்.
இவர் அஷ்வினின் பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து இங்கிலாந்து 578 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் பும்ரா மற்றும் அஷ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா மற்றும் ஷஹ்பாஸ் நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட்டுக்கு அடுத்தபடியாக சிப்லி 85 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 82 ரன்களும் எடுத்தனர். இதன் பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் களம் இறங்கினர்.