இங்கிலாந்து 178 ரன்களில் ஆல்-அவுட் இந்தியாவுக்கு 420 ரன்கள் வெற்றி இலக்கு

by Nishanth, Feb 8, 2021, 16:41 PM IST

இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 178 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அஷ்வின் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தியாவுக்கு 420 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடினமான இந்த வெற்றி இலக்கை நோக்கி இந்தியா விளையாடி வருகிறது.சென்னை டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 578 என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. இதன் பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, இங்கிலாந்து பந்து வீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் 337 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து இங்கிலாந்தை விட இந்தியா 241 ரன்கள் பின்தங்கி இருந்தது. இந்தியா பாலோ ஆன் பெற்ற போதிலும் இங்கிலாந்து மீண்டும் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆனால் முதல் இன்னிங்சை போல இங்கிலாந்து வீரர்களால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியவில்லை. இரண்டாவது இன்னிங்சில் இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அவர்கள் திணறினர். குறிப்பாக அஷ்வினின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் அவுட்டாகி வரிசையாக பெவிலியனுக்கு திரும்பிச் சென்றனர்.

இறுதியில் இங்கிலாந்து 178 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எந்த வீரரும் அரைசதத்தைக் கூட தாண்டவில்லை. முதல் இன்னிங்சைப் போலவே 2வது இன்னிங்சிலும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தான் அதிகபட்ச ரன்களை எடுத்தார். இவர் 40 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய தரப்பில் அஷ்வின் சிறப்பாக பந்துவீசி 61 ரன்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார். ஷஹ்பாஸ் நதீம் 2 விக்கெட்டுக்களையும், இஷாந்த் சர்மா, பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 420 என்ற கடினமான வெற்றி இலக்குடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது. ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் விளையாடி வருகின்றனர்.ஆனால் இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ரோகித் சர்மா 12 ரன்களில் ஜேக் லீச்சின் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கில்லுடன் புஜாரா ஜோடி சேர்ந்துள்ளார்.

You'r reading இங்கிலாந்து 178 ரன்களில் ஆல்-அவுட் இந்தியாவுக்கு 420 ரன்கள் வெற்றி இலக்கு Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை