சென்னை டெஸ்ட் போட்டியில் இன்னும் ஒரு நாளே மீதமுள்ள நிலையில் இந்தியாவுக்கு வெற்றி பெற இன்னும் 381 ரன்கள் தேவை. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன.சென்னை டெஸ்ட் போட்டியில் நான்கு நாட்கள் ஆட்டம் முடிந்து விட்டது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 578 ரன்கள் குவித்தது. இதன் பின்னர் ஆடிய இந்தியா 337 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால் இந்தியா 241 ரன்கள் பின்தங்கி இருந்தது. இந்தியா பாலோ ஆன் பெற்ற போதிலும் இங்கிலாந்து மீண்டும் பேட்டிங் செய்ய முன்வந்தது.
ஆனால் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து வீரர்கள் மிக விரைவில் ஆட்டமிழந்தனர். 178 ரன்களில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியத் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் சிறப்பாகப் பந்து வீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நதீம் 2 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இந்தியா 420 என்ற கடினமான வெற்றி இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடத் தொடங்கினர். ஆனால் ரோகித் சர்மா 12 ரன்கள் எடுத்த நிலையில் லீச்சின் பந்தில் கிளீன்பவுல்டு ஆனார். இதையடுத்து கில்லுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாகவும் நிதானமாகவும் ஆடி வருகின்றனர். இன்று ஆட்ட நேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் வெற்றி பெற இந்தியாவுக்கு 90 ஓவர்களில் 381 ரன்கள் எடுத்தாக வேண்டும். நாளை ஒருநாள் ஆட்டம் மீதமுள்ளது. 9 விக்கெட்டுகள் கைவசம் உள்ளன. இந்தியா வெற்றி பெற முயற்சிக்குமா அல்லது டிரா செய்யப் போராடுமா என்பது நாளை தெரிந்துவிடும். இங்கிலாந்துக்கு இது நல்ல வாய்ப்பு என்பதால் மீதமுள்ள 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றி பெற அந்த அணியின் பவுலர்கள் கடுமையாகப் போராடுவார்கள்.