தோல்வியின் விளிம்பில் இந்தியா உணவு இடைவேளையின் போது 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள்

by Nishanth, Feb 9, 2021, 11:48 AM IST

இங்கிலாந்து அணிக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியின் விளிம்பில் உள்ளது. உணவு இடைவேளையின் போது இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கோஹ்லி 45 ரன்களுடனும், அஷ்வின் 2 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.சென்னை டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கிட்டத்தட்ட தோல்வியை உறுதி செய்து விட்டது. ஆஸ்திரேலியாவை அந்த நாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டியில் 2-1 என்ற கணக்கில் தோற்கடித்த இந்தியா, உள்ளூர் போட்டிகளில் இங்கிலாந்தை அதைவிட அபாரமாக தோற்கடிக்கும் என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த எதிர்பார்ப்பு பொய்யாகி விட்டது.

சென்னையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் தற்போது இந்தியா தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. முதலில் ஆடிய இங்கிலாந்து 578 ரன்கள் குவித்தது. இதன் பின்னர் ஆடிய இந்தியா 337 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாலோ ஆன் பெற்ற போதிலும் இந்தியாவை மீண்டும் பேட்டிங் செய்யப் பணிக்காமல் இங்கிலாந்தே 2வது இன்னிங்சை தொடங்கியது.ஆனால் முதல் இன்னிங்சை போல இங்கிலாந்தால் சிறப்பாக ஆட முடியவில்லை. அஷ்வினின் சுழலில் சிக்கி 178 ரன்களில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து 420 என்ற கடினமான வெற்றி இலக்குடன் இந்தியா 2வது இன்னிங்சை நேற்று தொடங்கியது. ஆனால் ரோகித் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்தால் இங்கிலாந்து பவுலர்களை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். புஜாரா 15 ரன்களிலும், கில் 50 ரன்களிலும், துணை கேப்டன் ரகானே ரன் ஏதும் எடுக்காமலும், ரிஷப் பந்த் 11 ரன்களிலும், முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் கேப்டன் விராட் கோஹ்லி மட்டும் நிலைத்து நின்று ஆடி வருகிறார்.

உணவு இடைவேளையின் போது இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. கோஹ்லி 45 ரன்களிலும், அஷ்வின் 2 ரன்களிலும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் கைவசம் இன்னும் 4 விக்கெட்டுகளே உள்ளன. வெற்றி பெற இந்தியாவுக்கு இன்னும் 64 ஓவர்களில் 276 ரன்கள் எடுக்க வேண்டும். இதனால் இந்தியா வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், ஜேக் லீச் 2 விக்கெட்டுகளையும், பெஸ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

You'r reading தோல்வியின் விளிம்பில் இந்தியா உணவு இடைவேளையின் போது 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை