இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் 18 வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இருந்து வெளியேறிய கே.எல். ராகுல் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மொத்தம் நான்கு டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் சென்னையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்தன. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தும், 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. 3வது டெஸ்ட் போட்டி வரும் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரையும், நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி மார்ச் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரையும் நடைபெறுகிறது.
இந்நிலையில் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கான 18 பேர் அடங்கிய இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இருந்து வெளியேறிய கே. எல். ராகுல் அணியில் இடம் பிடித்துள்ளார். உடல் திறனை நிரூபித்தால் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்படுவார். உமேஷ் யாதவ் அணிக்கு வந்தால் வேகப்பந்து வீச்சாளர் ஷார்துல் தாகூர் விஜய் ஹசாரே டிராபிக்கான மும்பை அணியுடன் இணைவார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய தொடரின் போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் நவ்தீப் செய்னி ஆகியோர் கடைசி 2 டெஸ்ட் போட்டியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதேபோல ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹனுமா விஹாரிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதே சமயத்தில் 2வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர், முகம்மது சிராஜ் ஆகியோர் அணியில் நீடிக்கின்றனர். மேலும் சந்தீப் வாரியர், அங்கித் ராஜ்புத், ஆவேஷ் கான், கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் சவுரப் குமார் ஆகிய 5 பேர் வலை பந்து வீச்சாளர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கே.எஸ். பரத் மற்றும் ராகுல் சாஹர் ஆகியோர் கூடுதல் வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். வீரர்கள் விவரம்: விராட் கோஹ்லி (கேப்டன்), அஜிங்கியா ரகானே (துணை கேப்டன்), ரோகித் சர்மா, மாயங்க் அகர்வால், சுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, கே.எல் ராகுல், ஹார்திக் பாண்ட்யா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அஷ்வின், குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது சிராஜ்.