இதுவரை இல்லாத புதுவித புதுவித நிகழ்வுகளை சந்தித்து வருகிறது புதுச்சேரி மாநில காங்கிரஸ். மற்றும் புதுச்சேரியிலும் தேர்தல் நடத்தப்படும். யூனியன் பிரதேசமான புதுச்சேரி இந்த தேர்தலை தமிழகத்துடன் இணைந்து எதிர்கொள்ள உள்ளது. தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் இதற்கான முஸ்தீபுகள் தொடங்கிவிட்டன ஆனால் காங்கிரஸ் கட்சியினர் மட்டும் சற்று கலக்கத்தில் இருக்கிறார்கள். புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும்திமுக கட்சிகள் ஒருபுறமும் என் ஆர் காங்கிரஸ் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் இணைந்து இன்னொரு புறம், தேர்தலை சந்திக்க தயாராகிவருகிறது. தற்போது புதுவையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இருப்பினும் அங்கு காங்கிரசுக்கு தற்போது நேரம் சரியில்லை. ஏற்கனவே ஆட்சியில் தப்பித்தவறி மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யலாம் என்று நினைத்தால் கூட ரூபத்தில் கிரண்பேடி ரூபத்தில் வந்த ஆளுநர் அவ்வப்போது முட்டுக்கட்டை போட்டு கலங்கடித்து வந்தார்.
அவரது தொந்தரவு பொறுக்க முடியாமல் சில எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஏற்கனவே காங்கிரஸ் எம்எல்ஏ.க்களான நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணா ராவ் மற்றும் ஜான்குமார் என நான்கு பேர் இதுவரை தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதில் நமச்சிவாயமும் தீப்பாய்ந்தானும் விலகிய வேகத்தில் பாஜகவில் இணைந்து விட்டனர். ஆட்சி நிறைவடையும் நேரத்தில் அடுத்தடுத்து எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தது ஆட்சிக்கு பெரும் பின்னடைவாகவே உள்ளது. வெறும் வாயை மென்று கொண்டிருந்த எதிர்க்கட்சிகளுக்கு இந்த 'அவல்' கிடைத்ததும் இந்த அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. எனவே நாராயணசாமி தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்இதில் ஜான்குமார் நேற்றுதான் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள 30 தொகுதிகள் உள்ளன.
இதில் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் 15 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. சரி பாதி இடங்களை பிடித்து இருந்த நிலையில் சுயேட்சையாக வெற்றிபெற்ற மாஹே தொகுதி உறுப்பினரின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. மேலும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள திமுகவும் ஆதரவளித்தது. எல்லாம் சுபமாக சுமுகமாகப் போய்க் கொண்டிருக்க கடைசி நேரத்தில் கந்தலானது போல காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 4 பேர் ராஜினாமா செய்துள்ளனர். அதில் மல்லாடி கிருஷ்ணா ராவின் ராஜினாமா தவிர மற்ற மூவரின் ராஜினாமாவை சபாநாயகர் சிவக்கொழுந்து ஏற்றுக்கொண்டு விட்டார். இது தவிர காங்கிரஸ் கட்சியின் பாகூர் எம்.எல்.ஏவான தனவேலு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எனவே, தற்போது காங்கிரஸ் கட்சியின் பலம் 11 ஆக குறைந்து விட்டது. 3 திமுக மற்றும் ஒரு சுயேட்சை உறுப்பினர் ஆதரவு தான் காங்கிரசுக்கு இப்போது ஆக்ஸிசன் போல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
இது போதும் என்று வைத்துக்கொண்டாலும் எதிர்க்கட்சியான என்.ஆர் காங்கிரஸ் தரப்பில் 7 , அதிமுக தரப்பில் 4 மேலும் பாஜக சார்பில் நியமிக்கப்பட்ட நியமன உறுப்பினர்கள் மூவர் எதிர் வரிசையில் உள்ளனர். இருந்தும் எதிர்க்கட்சிகளின் பலம் 14 தான். அதே சமயம் மல்லாடி கிருஷ்ணா ராவின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் காங்கிரஸ் பெரும்பான்மையை இழக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் புதுச்சேரி அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது. அரசை கவிழ்க்க சதி நடக்கிறது என்று கூறி அமைச்சரவையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய இருப்பதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால் அமைச்சரவை ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது.
இந்திய அரசியல் சட்ட சாசனப்படி அரசு செயல்படும்” என முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். இருப்பினும் எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகின்றன. மல்லாடி கிருஷ்ணா ராவின் ராஜினாமா மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தானாகவே பெரும்பான்மையை இழந்து விடும். கட்சியின் அடிமட்ட தொண்டனுக்கு பதவி, பொறுப்புகளை கொடுக்காமல் வியாபாரிகளுக்கு கொடுத்தது தான் காங்கிரஸின் இந்த பரிதாப நிலைக்கு காரணம் என குமுறுகின்றனர். காங்கிரஸ் மீது பற்றுக் கொண்ட தொண்டர்கள் பலர். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்தான் இரண்டு விஷயங்கள் அரங்கேற உள்ளன ஒன்று புதிய கவர்னராக தமிழிசை பொறுப்பேற்பு. மற்றொன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி புதுச்சேரி வருகை. இந்த இரண்டும் காங்கிரசின் நிலையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.