2021 ஐபிஎல் போட்டியில் விளையாடமல் இருக்கலாம் என ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் கிளார்க் அறிவுறுத்தியுள்ளார். 2021 ஐபிஎல் டி20 தொடரின் புதிய சீசனில் பங்கேற்க உள்ள வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம், முதல் முறையாக சென்னையில் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது.
இதற்கிடையே, கடந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இருப்பினும், நடப்பு ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க ஸ்டீவ் ஸ்மித் பதிவு செய்திருந்தார். இந்நிலையில், ஏலத்தின்போது, ஸ்டீவ் ஸ்மித்தின் அடிப்படை தொகையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், ஸ்டீவ் ஸ்மித்தை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வராத நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஸ்டீவ் ஸ்மித்தை ரூ.2.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், கடந்த ஐபிஎல் ஏலத்தின்போது, ஸ்டீவ் ஸ்மித்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.12.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. கடந்த தொடரை விட தற்போது ஸ்மித் ரூ.10.3 கோடி குறைவாக எடுக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் கிளார்க் கூறுகையில், டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடியவர் ஸ்டீவ் ஸ்மித். ஆனால் கடந்த ஐபிஎல் அவருக்கு அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. ஆனால் இந்தாண்டு அவரை இவ்வளவு குறைவான தொகைக்கு ஏலம் எடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் இது நல்ல தொகைதான் என்றார்.
இருப்பினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது குறைவுதான் என்ற மைக்கல் கிளார்க், ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார். ஐபிஎல் போட்டிக்காக ஸ்மித் 8 வாரங்கள் இந்தியாவில் தங்க வேண்டியது இருக்கும். இந்த குறைந்த தொகைக்காக தனது குடும்பத்தை 8 மாதங்கள் ஸ்மித் பிரிந்து இருப்பார் என்று எனக்கு தோன்றவில்லை. அப்படி பார்த்தால், ஐபிஎல் போட்டியில் ஸ்மித் பங்கேற்காமலே இருக்காலாம் என்றார். விராட் கோலிக்கு முதலிடம் என்றாலும் முதல் மூன்று இடங்களில் ஸ்டீவ் ஸ்மித் இருக்கிறார் என்றும் மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார்.