சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் பார்வை தற்போது திரைத்துறையை நோக்கி நகர்ந்துள்ளது. ஆம்! தோனி அனிமேஷன் தொடர் ஒன்றில் நடிக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்த தோனி, ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு தலைமை தாங்குகிறார். அவரது ஓய்வு அறிப்பு, ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தாலும், ஐ.பி.எல் ஆட்டம் ஆறுதலை கொடுத்தது. இந்நிலையில் கிரிக்கெட்டிலிருந்த தனது கவனத்தை சற்று திரையுலகம் நோக்கி திருப்பியுள்ளார் தோனி.
அதன்படி, கேப்டன்-7 என பெயரிடப்பட்டுள்ள புதிய தொடர் ஒன்றில் தோனி நடிக்கிறார். இந்த தொடரை, தோனியும், அவரது மனைவி சாக்ஷியும் இணைந்து தயாரிக்கின்றனர். கிரிக்கெட் தவிர தன் வாழ்க்கையில் இடம்பெற்ற பிற விருப்பங்கள் குறித்து தொடர் தயாரிக்கப்பட்டுள்ளதாக தோனி தெரிவித்துள்ளார். இந்த தொடர் அடுத்த ஆண்டு வெளியாகும் எனத் தெரிகிறது.
தோனியை இதுவரை பார்த்திடாத வகையில் புனைவாக இந்த தொடருக்கான கதை உருவாக்கப்பட்டு வருகிறது. உளவு பார்க்கும் வகையில் இந்த தொடரின் கதை அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த தொடர் குறித்து தோனி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிரிக்கெட் மட்டுமல்லாது எனது பிற ஆர்வங்களையும் இந்த தொடர் உயிர்ப்பிக்கும் என நினைக்கிறேன். இதன் கதை அருமையாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு அச்சாரமாக லோகோ ஒன்று தயாரிப்பு தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. தோனியின் தயாரிப்பு நிறுவனம் புராண அறிவியல் அடிப்படை கொண்ட புனைகதை ஒன்றையும் வெப் சீரிஸாக வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.