தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4 வது டி20 போட்டியில் பாகிஸ்தான் தொடரை கைப்பற்றியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் நான்கு 20 ஓவர் போட்டிகளில் விளையாடியது. இந்த இரு அணிகளிடையேயான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான 20 ஓவர் போட்டிகள் நடைபெற்று வந்தது. 4 போட்டிகளை கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் 3 போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலையில் இருந்தது.
4-வது மற்றும் கடைசி போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக மாலன் மற்றும் மார்க்ரம் ஆகியோர் களமிறங்கினர். மார்க்ரம் 5 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முகமது நவாஸ் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்துவந்த வென் டர் டஸ்சனுடன் ஜோடி சேர்ந்த மாலன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மாலன் 28 பந்துகளில் 33 எடுத்திருந்த வெளியேறினார். ஆனால், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வென் டர் டஸ்சன் அரை சதம் கடந்து 52 ரன்களில் வெளியேறினார்.
அடுத்துவந்த தென் ஆப்பிரிக்க வீரர்கள் அனைவரும் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். இதனால், 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென் ஆப்பிரிக்கா 144 ரன்களை எடுத்தது.
145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் களமிறங்கினர். 2 பந்துகளை சந்தித்த ரிஸ்வான் டக்அவுட் ஆனார். அடுத்துவந்த பகர் சமான் கேப்டன் பாபர் அசாமுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக ஆடிய பகர் சமான் 34 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். அதைத் தொடர்ந்து 24 ரன்களில் பாபர் அசாமும் வெளியேறினார். அடுத்தடுத்து களம் இறங்கியவர்கள் மிக குறைந்த ரன்களிலேயே வெளியேறினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ரிஸ்வான் 21 பந்துகளில் 25 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 19 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் வீரர் அஸ்ரப் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். தொடர்நாயகன் விருது பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமுக்கு வழங்கப்பட்டது.