மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பறித்தது.
IPL தொடரின் 13 வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், குவிண்டன் டிகாக்கும் களமிறங்கினர். 3 வது ஓவரில் 2 ரன்கள் எடுத்த நிலையில் குவிண்டன் டிகாக் கேட்ச் அவுட்டானார்.
அடுத்ததாக சூர்யகுமார் யாதவ் உடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். சூர்யகுமார் யாதவ் 24 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அரைசதத்தை நோக்கி முன்னேறிய ரோகித் சர்மா 44 ரன்களில் வெளியேறினார்.
இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது.
138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு விளையாடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வீஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். ப்ரித்வீஷா 7 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேற ஸ்டீவ் ஸ்மித்துடன் ஷிகர் தவான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டது.
ஷிகர் தவான் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 45 ரன்கள் சேர்த்த நிலையில், ராகுல் சாஹர் பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். ஸ்டீவ் ஸ்மித் 33 ரன்களில் எல்.பி.டபில்யூ ஆனார்.
இறுதியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் சேர்த்தது.
இதன் மூலம் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.