டெல்லி டேர் டேவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2018 சீசனின் 30ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி டேர் டேவில்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தது.
அதிரடியாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் 40 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். அதேபோல கடைசி நேரத்தில் டெல்லியின் பந்துவீச்சை கேப்டன் தோனி வெளுத்து வாங்கினார். அவர் 22 பந்துகளில் [5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்] 51 ரன்களும், அம்பதி ராயுடு 24 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார்.
அதன் பிறகு, களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தனர். 8.5 ஓவர்களில் முதல் 4 விக்கெட்டுகளை 74 ரன்களை எடுத்து டெல்லி அணி திணறியது. பின்னர் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் விஜய் சங்கர் இணை அபாரமாக ஆடியது.
இந்த ஜோடி 88 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ரிஷப் பண்ட் 45 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து நிகிடி பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசி 2 ஓவர்களில் 49 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 19ஆவது ஓவரை பிராவோ வீசினார்.
அந்த ஓவரில் டெல்லி வீரர் ஷங்கர் 3 சிக்ஸர்களை விளாசினார். இதனால், கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட 14 ரன்கள் மட்டுமே நிகிடி விட்டுக்கொடுத்தார். இதனால், சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.