இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளார்.
இதனால், அவருக்கும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. மேலும், போட்டி நடத்த ஆன 100 சதவிகித செலவையும் கட்டுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணி, 1 - 0 என்ற ரீதியில் தொடரில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தத் தொடரின் இரண்டாவது போட்டியின் இரண்டாவது நாளில் இலங்கை கேப்டன் தினேஷ் சந்திமால், தன் பாக்கெட்டில் இருந்து எதையோ எடுத்து வாயில் மென்ற பின்னர், அதை பந்தில் தடவியுள்ளார். இதனால், பந்து சேதமடைந்துள்ளது.
இதைப் போட்டி நடுவர்கள் பார்த்து சந்திமாலிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், கேமராக்களிலும் அவரின் செயல் படம் பிடிக்கப்பட்டது. இந்த ஆதாரங்களை வைத்து போட்டியின் ரெஃப்ரி, ஜவகல் ஸ்ரீநாத், சந்திமால் மீதான குற்றத்தை உறுதி செய்தார். இதையடுத்து தான், தினேஷ் சந்திமாலுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் இருந்து தடை விதிக்கப்பட்டது.
மேலும், 100 சதவிகித போட்டி ஃபீஸும் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து ஸ்ரீநாத், ‘இந்த குற்றம் குறித்து எனது பார்வைக்கு வந்த பின்னர், தினேஷ் சந்திமாலை அழைத்தேன். அவரிடம், இந்த சம்பவம் குறித்து கேட்டேன். அப்போது, ‘எனது வாயில் ஒரு பொருளைப் போட்டேன். ஆனால், அது என்னவென்று எனக்கு நியாபகமில்லை’ என்று கூறினார். இது ஏற்கத்தக்கது அல்ல’ என்று கூறி தண்டனையை உறுதி செய்தார்.