இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இங்கிலாந்துக்குப் பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடரை விளையாடி வருகிறது. டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பிற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று முதல் ஒருநாள் போட்டி நடந்தது. இந்தப் போட்டிக்கான டாஸை வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பௌலிங் செய்ய தீர்மானித்தார்.
தனது முதலாவது இன்னிங்ஸை இங்கிலாந்து நிதானமாக தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களான ஜேஸன் ராய் மற்றும் ஜோஸ் பட்ரல் ஆகியோர் 35 பந்துகளுக்கு 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர்கள் மற்றும் அடுத்து வந்த ஜோ ரூட் ஆகிய மூவரையும் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தான் அவுட்டாக்கி பெவிலியன் அனுப்பினார். தொடர்ந்து குல்தீப்பின் ஸ்பின்னுக்கு பதில் சொல்ல முடியாமல் மொத்த இங்கிலாந்து அணியும் தடுமாறியது. ஒருபுறம் விக்கெட்டுகளா விழுந்து கொண்டிருக்க, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் அரைசதத்தை பூர்த்தி செய்தனர்.
49.5 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து, 268 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எளிமையான இலக்கை சீக்கிரம் அடையும் நோக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ஓபனர்களான தவான் மற்றும் ரோகித் அதிரடி ஆட்டம் ஆடினர். தவான் 40 ரன்களுக்கு அவுட்டாக, கேப்டன் கோலியுடன் பார்டனர்ஷிப் போட்டு ரோகித், இங்கிலாந்து அணியினரின் பந்துகளை மைதானத்தின் நாலா புறமும் சிதறடித்தார். அவர் சதம் அடித்த பின்னரும் தொடர்ந்து ஆட, கோலி 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்தியா, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 40.1 ஓவ்ரகளில் கடந்து மாஸ் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா, 1 - 0 என்ற ரீதியில் முன்னிலை வகிக்கறது.