ஃபிபா 2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை வென்ற பிரான்ஸ் அணிக்கு அந்நாட்டில் உற்சாகக் கொண்டாட்டத்துடனான வரவேற்பு அளிக்கப்பட்டது.
யாரும் எதிர்பாராத விதமாக முதல் முறையாக ஃபிபா 2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மேலும் பிரான்ஸ் அணியும் மீண்டும் உலகக்கோப்பை பைனலுக்கு நுழைந்து இருந்தது. இந்த இரு அணிகள் இடையேயான இறுதிப்போட்டி மிகவும் ஆக்ரோஷம் நிறைந்ததாகக் காணப்பட்டது.
இந்நிலையில், இப்போட்டியில் 4 -2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி இரண்டாவது முறையாக பிரான்ஸ் கோப்பையைக் கைப்பற்றியது. 20 ஆண்டுகளுக்கு பின் பிரான்ஸ் வெற்றி பெற்றது, ரசிகர்களிடையே மகிழ்ச்சியை கரைபுரண்டு ஒடச்செய்தது.
முதல் இடம் பிடித்த பிரான்ஸ் அணிக்கு 255 கோடி ரூபாய் பணம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த குரோஷியா அணிக்கு 188 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதையடுத்து பிரான்ஸ் நாடு திரும்பிய கால்பந்து அணிக்கு அந்நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தனி விமானம், சிவப்புக் கம்பள வரவேற்பு, ஹெலிகாப்டர் வாழ்த்து, திறந்தவெளி வாகன ஊர்வலம், ராணுவ அணிவகுப்பு என பிரான்ஸ் நாடே கொண்டாட்டத்தில் திளைத்து வருகிறது.