ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடரில், பாகிஸ்தான் – ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. ஆனால், இந்த டெஸ்ட் தொடருக்கு ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெலை தேர்வு செய்யாத முடிவை முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கடுமையாக எதிர்த்துள்ளார்.
யுஏஇயில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் பல புதுமுகங்கள் இடம்பெற்றனர். எப்படியும் மேக்ஸ்வெல் ஹேண்ட்ஸ்கம்ப் இருப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இருவரும் தேர்வு செய்யப்படாதது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தின் இந்த அதிரடி முடிவை முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கடுமையாகச் சாடியுள்ளார். “நான் மேக்ஸி இடத்திலிருந்தால், இந்தியாவுக்கு ஏ தொடரில் என்னை தேர்வு செய்து நான் என்னை நிரூபிக்க ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்று கேட்டிருப்பேன்.
எனக்கு இது வழக்கத்துக்கு மாறானதாகவும் விசித்திரமாகவும் படுகிறது. எனக்கு ஏன் ஆஸ்திரேலியா ஏ அணியில் என்னை நிரூபிக்க வாய்ப்பளிக்கவில்லை என்று அவர் இடத்திலிருந்து எனக்குக் கேட்கத் தோன்றுகிறது.
ஆஸ்திரேலியா ஏ தொடருக்கு அவரைச் சேர்க்கவில்லை. அங்கு அவர் எப்படி ஆடுவார் என்பது எங்களுக்குத் தெரியும் என்று கூறினர். ஆனால் இப்போது பார்த்தால் அவரை இனி தேர்வு செய்யவே போவதில்லை என்பது போல் தெரிகிறது. அவர் பரிசீலனையில் கூட இல்லை போலும்.
ஏ தொடரில் மார்னஸ், டிராவிஸ் ஹெட்டுக்கு வாய்ப்பளித்தனர். அவர்களும் அங்கு நன்றாக ஆடினர். அதனடிப்படையில் தேர்வு செய்தனர். மேக்ஸ்வெலை நீக்கியது என்ன சேதி என்று எனக்குத் தெரியவில்லை, எனக்கு குழப்பமாகவே உள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு ஆட வேண்டும் என்று அவர் தனி முனைப்பு காட்டி வருகிறார். அவர் ஒரு மேட்ச் வின்னிங் பிளேயர். அவருக்கு ஆஸ்திரேலியாவுக்காக ஆட நிறைய வயதும் திறமையும் உள்ளது.” என்றார் ரிக்கி பாண்டிங்.
அல்ஜசீரா ஆட்ட நிர்ணய சூதாட்ட ஊழல் புகாரில் மேக்ஸ்வெல் பெயரும் அடிபட்டதால் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் மேக்ஸ்வெலை ஒதுக்கியிருக்கலாம் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் கிசு கிசுக்கின்றனர்.