துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், அறிமுக அணியான ஹாங்காங்கை பாகிஸ்தான் 116 ரன்களுக்கு பதம் பார்த்தது.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஹாங்காங் அணி வீரர்கள், பாகிஸ்தானின் அசுர வேக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 37.1 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து வெறும் 116 ரன்களை மட்டுமே ஹாங்காங் அணி எடுத்தது.
ஹாங்காங் அணி ஸ்கோர் கார்டு:
நிஜகாத் கான் (13), கேப்டன் அனுஷ்மான் ராத் (19), பாபர் ஹயாத் (7), கிறிஸ்டோபர் கார்ட்டர் (2), கின்சித் ஷா (26), இஷான் கான் (0), அய்ஜாஸ் கான் (27), ஸ்காட் மெக்கெச்னி (0), தன்வீர் அப்சல் (0), இஷான் நவாஸ் (9), நதிம் அகமது (9).
ஹாங்காங்கை நொறுக்கிய உஸ்மான் கான்:
பாகிஸ்தான் அணி சார்பில், உஸ்மான் கான் 7.3 ஓவர்கள் வீசி வெறும் 19 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹசன் அலி மற்றும் ஷதப் கான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஃபஹிம் அஷ்ரப் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
அசால்ட்டாய் வென்ற பாகிஸ்தான்:
117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 23.4 ஓவர்களில் 120 ரன்கள் குவித்து அபார வெற்றியை ருசித்தது.
பாகிஸ்தான் அணி ஸ்கோர் கார்டு:
இமாம் உல்-அக் (50- நாட் அவுட்), ஃபகர் ஜமான் (24), பாபர் அஸாம் (33), சோயப் மாலிக் (9 – நாட் அவுட்).
இன்றைய போட்டி:
இன்றைய போட்டியில், இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை வென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. பங்களாதேஷ் அணியுடனான படுதோல்வியில் இருந்து இலங்கை மீண்டு வருமா என அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
அதே சமயம், ஆப்கனிஸ்தான் அணியும் வெற்றியை ருசிக்க டஃப் கொடுக்கும் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது. இன்றைய போட்டி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.