பார்முலா 1- ஹாமில்டன் தொடர்ந்து முதலிடம்!

ஹாமில்டன் தொடர்ந்து முதலிடம்!

by Mari S, Sep 17, 2018, 22:31 PM IST

F1 ரேஸ் என அழைக்கப்படும் பார்முலா1 கார் பந்தயத்தின் சிங்கப்பூர் போட்டியில் நடப்பு சாம்பியனும் இங்கிலாந்து வீரருமான லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்.

Hamilton

2018ம் ஆண்டுக்கான பார்முலா1 கார் பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. சிங்கப்பூரில் நேற்று இரவு நடைபெற்ற, இதன் 15-வது சுற்றான சிங்கப்பூர் கிராண்ட்பிரி அங்குள்ள மரினா பே ரன்வேயில் நடந்தது. மின்னொளியின் கீழ் 308.706 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட நடப்பு சாம்பியனும், இங்கிலாந்து வீரருமான லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) ஒரு மணி 51 நிமிடம் 11.611 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்ததுடன், அதற்குரிய 25 புள்ளிகளையும் வசப்படுத்தினார். இந்த சீசனில் ஹாமில்டனின் 7-வது வெற்றி இதுவாகும். ஒட்டுமொத்தத்தில் அவர் ருசித்த 69-வது வெற்றியாகும்.

அவரை விட 8.961 வினாடி மட்டுமே பின்தங்கிய நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 2-வதாக வந்து 18 புள்ளிகளையும், முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 3-வதாக வந்து 15 புள்ளிகளையும் பெற்றனர். போர்ஸ் இந்தியா அணிக்காக பங்கேற்று வரும் மெக்சிகோவின் செர்ஜியோ பெரேஸ் 16-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு போர்ஸ் இந்தியா அணி வீரர் பிரான்சின் ஈஸ்ட்பான் ஒகானின் கார் விபத்தில் சிக்கியதால் பாதியிலேயே விலகினார்.

இதுவரை நடந்துள்ள 15 சுற்று முடிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான வாய்ப்பில் ஹாமில்டன் 281 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். செபாஸ்டியன் வெட்டல் 241 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பின்லாந்து வீரர் கிமி ரெய்க்கோனன் 174 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

அடுத்த சுற்று போட்டி வருகிற 30ம் தேதி ரஷ்யாவில் நடக்கிறது. அதிலும், ஹாமில்டன் அசத்துவார் என்றும் பார்முல 1 டைட்டிலை ஹாமில்டன் இந்த ஆண்டும் தொடர்ந்து வென்று தனது சாம்பியன் பட்டத்தை தக்கவைப்பார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

You'r reading பார்முலா 1- ஹாமில்டன் தொடர்ந்து முதலிடம்! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை