ஆசிய கோப்பையை தொடர்ந்து, மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில், இந்திய அணி மோதுகிறது. இந்தியா – மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது.
காலை 9 மணிக்கு துவங்கவுள்ள டெஸ்ட் போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. கேப்டன் கோலி, டாஸில் வெற்றிப் பெற்று, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
ஜாசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவானுக்கு ஓய்வளிக்கப்பட்டு, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், இந்தியா- மேற்கிந்திய மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று காலை தொடங்குகிறது. சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்திய அணி, போதிய அனுபவம் இல்லாத மேற்கிந்திய அணியை எளிதில் வீழ்த்தி விடும் என்பதே நிபுணர்களின் கணிப்பாகும்.
உள்ளூரில் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி முத்திரை பதித்துள்ள இந்திய அணி, அந்த எண்ணிக்கையை 10 ஆக உயர்த்தும் ஆவலில் இருக்கிறது. கேப்டன் விராட் கோலி, புஜாரா, ரஹானே, லோகேஷ் ராகுல் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். அஸ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் சுழலில் மிரட்ட காத்திருக்கிறார்கள். 18 வயதான மும்பை பேட்ஸ்மேன் பிரித்வி ஷா இந்த டெஸ்டில் அறிமுக தொடக்க வீரராக இடம்பிடிப்பது உறுதியாகியுள்ளது.
மேற்கிந்திய அணியை பொறுத்தவரை அந்த அணியில் இடம் பிடித்துள்ள 5 பேர் மட்டுமே இதற்கு முன்பு இந்தியாவில் டெஸ்டில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள். கேப்டன் ஜாசன் ஹோல்டர் கூட இனிதான் முதல் முறையாக இந்திய மண்ணில் டெஸ்டில் விளையாட இருக்கிறார்.
பேட்டிங்கில் கிரேக் பிராத்வெய்ட், ரோஸ்டன் சேஸ், கீரன் பவெல், ஷாய் ஹோப்பும், பந்து வீச்சில் கேப்டன் ஹோல்டர், தேவந்திர பிஷூ, கேப்ரியல் ஆகியோரையும் நம்பி இருக்கிறது. ஒருங்கிணைந்து ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே மேற்கிந்திய அணியால் இந்தியாவின் சவாலை சமாளிக்க முடியும்.
இந்திய அணி:
லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா, புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷாப் பான்ட் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் அல்லது ஷர்துல் தாகூர்.
மேற்கிந்திய தீவுகள் அணி:
கிரேக் பிராத்வெய்ட், கீரன் பவெல், ஷாய் ஹோப், சுனில் அம்ப்ரிஸ், ஷிம்ரோன் ஹெடிம்யேர், ரோஸ்டன் சேஸ், ஷேன் டாவ்ரிச் (விக்கெட் கீப்பர்), ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ஷனோன் கேப்ரியல், தேவேந்திர பிஷூ, கீமோ பால்.
ஆசிய கோப்பையை வென்றது போல், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரையும் இந்திய அணி வெல்ல வாழ்த்துகள்!