குஜராத்தில் உள்ள் ராஜ்கோட்டில், மேற்கிந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் நேற்று தொடங்கியது. இதில், துவக்க ஆட்டக்காரராக அறிமுக வீரர் பிரித்வி ஷா களமிறங்கி 99 பந்தில் அபாரமாக ஆடி அசத்தல் சதமடித்தார். குறைந்த வயதில் சதமடித்த இந்தியர் பட்டியலில் சச்சினுக்கு பிறகு பிரித்விஷா இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
மேற்கிந்திய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ராஜ்கோட்டில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்டில் இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகள் மோதின.
டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்த டெஸ்டில் பிரித்வி ஷா அறிமுக வீரராக களமிறங்கினார். பிரித்வி ஷா அதிரடியாக ஆடினார். இதனால் அவர் 99 பந்துகளில் சதமடித்து அசத்தினார். 134 ரன்கள் எடுத்து பந்துவீச்சாளர் கையிலேயே கொடுத்து ஈசியாக அவுட்டானார்.
இதையடுத்து, குறைந்த வயதில் சதமடித்த இந்தியர் பட்டியலில் பிரித்வி ஷா இரண்டாம் இடம் பிடித்தார். இவருக்கு முன்னதாக, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டியில் குறைந்த வயதில் சதமடித்து முதலிடம் பிடித்துள்ளார். அவர் 17 வருடம் 107 நாட்கள் ஆன நிலையில் டெஸ்டில் சதமடித்தார்.
பிரித்வி ஷா, 18 வருடம் 329 நாட்கள் ஆன நிலையில் நேற்று டெஸ்ட் போட்டியில் சதமடித்துள்ளார். மேலும், குறைந்த பந்துகளில் சதமடித்த மூன்றாவது வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷிகர் தவான் 85 பந்துகளிலும், டுவைன் ஸ்மித் 93 பந்துகளிலும் சதமடித்து உள்ளனர்.
இளம் வயதில், பிரித்வி ஷா, நேற்று அபாரமாக விளையாடி சதம் விளாசியதற்காக, அவரை கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். இந்தியாவுக்கு அடுத்த சச்சின் ரெடியாகிட்டார் என சமூக வலைதளங்களில் மீம்களும் உருவாக்கப்பட்டு வைரலாக பரவி வருகின்றன.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு, 364 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் கோலி 72 ரன்களுடனும் ரிஷப் பந்த் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்றைய போட்டி காலை 9.30 மணிக்கு துவங்கவுள்ளது.