மகளிருக்கான டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் 20-22, 21-17, 24-22 என்ற செட் கணக்கில் போராடி வென்றார்.
டென்மார்கின் ஒடென்சி நகரில், டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நேற்று தொடங்கியது. மொத்தம் ரூ.5½ கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு ரூ.40 லட்சமும், 2-வது இடத்தை பிடிப்போருக்கு ரூ.20 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். முதல் நாளான நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் பி.வி.சிந்து, 10-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் பீவென் ஜாங்குடன் மோதினார். 55 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் சிந்து 17-21, 21-16, 18-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். கடந்த ஆண்டும் இந்த போட்டியில் சிந்து முதல் சுற்றுடன் நடையை கட்டியது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்தியாவின் சாய்னா நேவால், செங் நகன் யுயை(ஹாங்காங்) எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் நீயா-நானா? என்று இருவரும் கடுமையாக மல்லுகட்டினர். முதல் இரு செட்டை இருவரும் தலா ஒன்று வீதம் கைப்பற்றிய நிலையில் கடைசி செட்டில் அனல் பறந்தது. 20-20, 22-22 என்று வரை சமநிலை நீடித்தது. கடைசியில் செங் நகன் அடுத்தடுத்து பந்தை வெளியே அடித்து விட, சாய்னாவின் வசம் வெற்றிக்கனி விழுந்தது. 1 மணி 21 நிமிடங்கள் நடந்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் சாய்னா 20-22, 21-17, 24-22 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். சாய்னா அடுத்து 2-ம் நிலை வீராங்கனையான அகானே யமாகுச்சியை (ஜப்பான்) சந்திக்கிறார்.
ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-17, 21-18 என்ற நேர் செட்டில் ஷி யுகியை (சீனா) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.