இந்தியா – மேற்கிந்திய அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் இந்திய அணி போராடி வெற்றியை பதிவுசெய்தது.
மேற்கிந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்றிய இந்திய அணி, டி20 தொடரின் முதல் ஆட்டத்தை நேற்று விளையாடியது.
கொல்கத்தா ஈடன் கார்டனில் இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய அணி இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 20 ஓவர் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி வெறும் 109 ரன்களை மட்டுமே எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஃபேபியன் ஆலன் 27 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் 15 ரன்களை கூட தாண்டவில்லை. 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை எதிர்கொள்ள தயாரான இந்திய அணிக்கு மேற்கிந்திய பவுலர்களும் கடும் நெருக்கடியை கொடுத்தனர்.
அதிரடி தொடக்க ஆட்டக்காரர் மற்றும் நேற்றைய போட்டியின் கேப்டனுமான ரோகித் சர்மா 6 பந்துகளில் ஒரு பவுண்டரி மட்டுமே விளாசி 6 ரன்களில் தாமஸ் பந்தில் அவுட்டானார். அதே தாமஸ், தவானையும் 3 ரன்களுக்கு வெளியேற்றினார்.
அடுத்ததாக களமிறங்கிய லோகேஷ் ராகுல் 16 ரன்களுக்கும், தோனிக்கு பதிலாக களமிறங்கிய ரிஷப் பந்த் 1 ரன்னுக்கும் விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இதனால், படுமோசமான நிலைக்கு இந்திய அணி சென்றது.
கேப்டன் கோலி இல்லாத நிலையால், ஒன் டவுன் சிறப்பாக அமையவில்லை. டி20 போட்டியில் தோனியின் அதிரடியும் மிஸ்ஸிங் ஆனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது.
இந்நிலையில், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் மற்றும் மணிஷ் பாண்டே பொறுப்புடன் விளையாடி அணியை தோல்வியில் இருந்து மீட்டனர். கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடிய தினேஷ் கார்த்திக் 31 ரன்கள் எடுத்தார். மணிஷ் பாண்டே 19 ரன்களுக்கு அவுட்டாக, அடுத்ததாக களமிறங்கிய க்ருணால் பாண்ட்யா 9 பந்துகளில் 3 பவுண்டரிகள் விளாசி 21 ரன்களை சேர்த்து அணிக்கு த்ரில் வெற்றியை ஈட்டித் தந்தார்.
இருவரது பொறுப்பான ஆட்டத்தால், 17.5 ஓவர்களிலேயே இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களை கடந்து முதல் டி20யின் வெற்றியை ருசித்தது. இந்த தொடரையும் இந்தியா கைப்பற்றி மேற்கிந்திய அணியை ஒயிட்வாஷ் செய்து அனுப்பும் என ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.