கடந்த 2011ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில், இநதியா - இலங்கை இறுதி ஆட்டத்தில் சூதாட்டம் நடந்திருப்பதால் விசாரணைத் தேவை என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்டுள்ள வீடியோவில்,'' மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி தோற்றது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. நானும் வர்ணணையாளராக அந்தப் போட்டியில் பணியாற்றினேன். இலங்கை தோற்றதும் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. இது குறித்து விசாரணைத் தேவை'' எனக் கூறியுள்ளார்.
வீரர்கள் யாருடைய பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. அதே வேளையில், ''கிரிகெட் உடையில் சேறைப் பூசிக் கொள்ளாதீர்கள் '' என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ''அந்தப் போட்டியில் இலங்கையின் முன்னணி வீரர்கள், ஏஞ்சலா மேத்யூஸ், அர்ஜுனா மென்டிஸ், ரங்கனா ஹெராத், சமர சில்வா உள்ளிட்டோர் ஏன் விளையடவில்லை என்ற கேள்வி எழுகிறது. முதலில் விளையாடிய இலங்கை அணி 274 ரன்கள் எடுத்தது. இந்திய வீரர் சச்சின் 18 ரன்களில் அவுட் ஆனார். ஆயினும் இந்தியா வெற்றி பெற்றது எப்படி எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரணதுங்காவின் செய்தி தொடர்பாளர், தமிரா மஞ்சு, இந்த விவகாரம் குறித்து இலங்கை அதிபர் மைத்ரிபால ஸ்ரீசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.