இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 286 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகப்பட்சமாக டி வில்லியர்ஸ் 65 ரன்களும், கேப்டன் ஃபாப் டு பிளஸ்ஸி 62 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 209 ரன்களுக்குள் சுருண்டது. 92 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணிக்கு ஹர்த்திய பாண்டியாவின் 93 ரன்கள் கைகொடுத்தது. இல்லையென்றால், 150 ரன்களைக் கூட தாண்டி இருக்காது.
42 ஓவர்கள் தாக்குப்பிடிக்காத தென் ஆப்பிரிக்கா:
பின்னர், தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்திருந்தது. இதனிடையில் மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் பாதிப்படைந்தது. இந்நிலையில் நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்து நடைபெற்றது.
இதில் தென் ஆப்பிரிக்காவின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. இதனால், 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகப்பட்சமாக டி வில்லியர்ஸ் 35 ரன்களும், மார்க்ரம் 34 ரன்களும் எடுத்திருந்தனர். அந்த அணியில் 7 பேர் இரட்டை இலக்கத்தையே தொடவில்லை.
தென் ஆப்பிரிக்கா வேகத்தை தாக்குப் பிடிக்காத இந்தியா:
இதன் பின்னர் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஆனால், தென் ஆப்பிரிக்காவின் புயல் வேகப் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் இந்திய அணி திணறியது.
ஷிகர் தவான் 16 ரன்களிலும், முரளி விஜய் 13 ரன்களிலும், புஜாரா 4 ரன்னிலும் வெளியேறினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த கேப்டன் விராட் கோலி 28 ரன்னில் வெளியேறினார். அதன் பின்னர் ரோஹித் சர்மா [10], ஹர்த்திக் பாண்டியா [1], விருத்திமான் சஹா [8] என அடுத்தடுத்து வெளியேற இந்திய அணி 82 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது.
இதனால், இந்திய மோசமாக தோற்கும் நிலை இருந்தது. ஆனால், ஆல் ரவுண்டர் அஸ்வின் சரிவில் இருந்து அணியை மீட்டார். பின்னர் 37 ரன்கள் எடுத்திருந்த போது, பிலாந்தர் பந்தில், விக்கெட் கீப்பர் குவிண்டன் டி காக் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அப்போது இந்திய அணியின் எண்ணிக்கை 131 ஆக இருந்தது. அணிக்கு மேற்கொண்டு 77 ரன்கள் தேவையாக இருந்தது. ஆனால், மேலும் ரன்கள் சேர்ப்பதற்குள் கைவசம் இருந்த இரண்டு விக்கெட்டுகளையும் இழக்க இந்திய அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. அட்டகாசமாக பந்துவீசிய அந்த அணியின் வெர்னோன் பிலாந்தர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரபாடா மற்றும் மோர்னே மோர்கல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.