இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக மீண்டும் ரமேஷ் பவாரேயே தேர்ந்தெடுக்குமாறு இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் பிசிசிஐ க்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்ட நிலையில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் மற்றும் ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில், ''ரமேஷ் பவார் எங்களை வீரர்களாக மட்டும் மேம்படுத்தவில்லை. எங்களை ஊக்கப்படுத்தி எங்களது எல்லைகளை நாங்களே உடைக்கும் சவால்களை உருவாக்கினார். பவார் திட்ட ரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முகத்தை மாற்றினார்.
மிதாலி அரை இறுதியில் நீக்கப்பட்டது முற்றிலும் அந்த ஆட்டத்தின் நிலைமையைப் பொறுத்தது. மூத்த அதிகாரிகள் பலரது ஆலோசனைகளுக்குப் பிறகுதான் அந்த அணி தேர்வு நடந்தது. பவாரையே மீண்டும் அணியின் பயிற்சியாளராக இருக்க விரும்புகிறேன். அவரை மாற்ற தேவையில்லை'' என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அரை இறுதியில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது.
இதனையடுத்து முன்னாள் கேப்டனான மிதாலி ராஜ் முக்கியமான நாக்-அவுட் ஆட்டத்தில் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆகவே மிதாலி ராஜ் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரமேஷ் பவார், நிர்வாகக் குழு (சிஓஏ) உறுப்பினராக உள்ள டயானா எடுல்ஜி ஆகியோரை குற்றம் சாட்டி பிசிசிஐ க்கு கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.