கொடநாடு கொலை கொள்ளை தொடர்பான செய்திகளை வெளியிடும் மீடியாக்களை கோழைத்தனத்தோடு மிரட்டும் எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் சாடல்

“எனக்கு எந்தப் பயமும் இல்லை என்று வாயால் சொல்லிக்கொண்டே, கொடநாடு கொலை கொள்ளை தொடர்பான செய்திகளை வெளியிடும் மீடியாக்களை கடைந்தெடுத்த கோழைத்தனத்தோடுமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிரட்டி வருகிறார்; இதைவிடக் கீழ்த்தரமான செயல் வேறு உண்டா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

கொடநாடு கொலைகள் – கொள்ளை விவகாரத்தில் எந்த வழியிலும் தப்பிக்க முடியாதபடி வசமாக மாட்டிக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு நாள் விடியும் போதும் விடிவேதும் கண்ணுக்குத் தெரியவில்லையே என்று விழிபிதுங்கி மனம் வெதும்பிக்கொண்டு இருக்கிறார். ஒரு நாட்டின் முதலமைச்சர் மீதே கொலை, கொள்ளை புகார்கள் சொல்லப்படுகிறது என்றால், நியாயமாகப் பார்த்தால் பதவி விலகி சட்டப்படி நியாயமான நேர்மையான விசாரணையை எடப்பாடி பழனிசாமி துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும்.

அவரிடம் எல்லாம் நியாய தர்மங்களை எதிர்பார்க்க முடியாது; நேர்மைக்குத் தலைவணங்கும் குணமும் கிடையாது. ஆனால் உரிய பதிலைச் சொல்லாமல், திசைதிருப்பும் தந்திரத்தைச் செய்து நழுவிக்கொண்டு நாட்களைக் கடத்தி வருகிறார் முதலமைச்சர்.

கொடநாடு விவகாரத்தில் ஒரு கொலை நடந்துள்ளது. மூன்று பேர் விபத்தில் கொல்லப்பட்டுள்ளார்கள். ஒருவர் மீது கொலை முயற்சி செய்யப்பட்டு தப்பி உள்ளார். ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

இந்த விவகாரத்தில் நேரடியாகத் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகிய இருவரும் ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ் சொல்லித்தான் கொள்ளை சம்பவத்தில் இறங்கியதாகச் சொல்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்காகத்தான் இதனை நான் செய்கிறேன் என்று கனகராஜ் தன்னிடம் சொன்னதாக சயன், மனோஜ் ஆகிய இருவரும் சொல்கிறார்கள்.

2 ஆயிரம் கோடி ரூபாய் பணம் இருந்ததாகவும் சில ஆவணங்களை எடுக்க வேண்டும் என்றும் அதற்காக 5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது என்றும் சயன் சொல்லி இருக்கிறார். இந்த விவகாரம் முடிந்த பிறகு கனகராஜ் மர்மமான முறையில் விபத்துக்குள்ளாகிறார்.

சயன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவரது மனைவியும், மகளும் இறக்கிறார்கள். சயன் உயிர் தப்புகிறார். கொடநாடு பங்களாவின் சிசிடிவி ஆபரேட்டர் தினேஷ்குமார் மர்மான முறையில் தற்கொலை செய்து கொள்கிறார்.

இந்த கொலை, கொள்ளை, தற்கொலை, விபத்துகள் அனைத்துமே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக இந்த விவகாரம் மீடியாக்களில் கண்கூசும் அளவுக்குப் போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால் நேரடியாக இதற்கு முதலமைச்சர் இதுவரை பதில் சொல்லவில்லை. சுற்றி வளைத்து ஏதேதோ பேசுகிறார். பேசுவதில் அவருக்கும் தெளிவில்லை; கேட்பவர்களுக்கும் தலைசுற்றுகிறது. என்ன தயக்கம் அவருக்கு இருக்கிறது? ஏன் இப்படி பயப்படுகிறார் பம்முகிறார் முதலமைச்சர்?

கனகராஜ் சொல்லித்தான் இதனைச் செய்தோம் என்று சயன் சொல்லி இருக்கிறார். அப்படியானால் கனகராஜ் உயிரோடு இருக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி நினைத்திருக்கலாம் என்று எல்லோருக்கும் சந்தேகம் எழுவது நியாயமானது தானே?

கனகராஜின் அண்ணன் தனபால் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்புகிறார். ‘’2017 ஏப்ரல் 28ம் தேதி சேலம் ஆத்தூர் நெடுஞ்சாலையில்
தென்னங்குடி பாளையம் மலர் மெட்ரிக் பள்ளி அருகே இரவு 8.30 மணிக்கு சாலை விபத்தில் என் தம்பி மரணம் அடைந்ததாக தகவல் கொடுத்தனர். அப்போது கோவையில் இருந்து நான் ஐந்து மணி நேரத்துக்குள் விபத்து நடந்த இடத்துக்கு சென்று விட்டேன்.

விபத்து நடந்ததற்கான எந்த அறிகுறியும் அங்கு இல்லை.
தம்பியின் பைக்கும் விபத்து ஏற்படுத்திய காரும் அங்கு இல்லை. விபத்து நடந்த மூன்றாவது நாளில் ஆத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு இடமாறுதல் செய்யப்பட்டார்.

எடப்பாடியில் அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த சுரேஷ்குமார் தினமும் என் தம்பியிடம் நான்கைந்து மணிநேரம் பேசி இருக்கிறார். பழனிசாமிக்கு மிகமிக வேண்டப்பட்டவர்கள் மட்டுமே எடப்பாடி ஸ்டேஷனின் வேலை பார்க்க முடியும்.

என் தம்பிக்கும் எடப்பாடி இன்ஸ்பெக்டருக்கும் என்ன தொடர்பு? அவ்வளவு நேரம் பேசுவதற்கு என்ன காரணம்? என் தம்பி மரணத்தில் இப்படி விடை தெரியாத மர்மங்கள் நிறைய உள்ளன. சிபிஐ விசாரித்தால் பழனிசாமி நிச்சயம் சிக்குவார். என் தம்பியின் ஆன்மா பழனிசாமியை சும்மா விடாது” என்று” ஜூனியர் விகடன்” இதழுக்கு தனபால் பேட்டி அளித்துள்ளார்.

இதற்கு முதலமைச்சர் முதலில் நேரடியாக எல்லோருக்கும் புரியும்படி பதில் சொல்ல வேண்டும்.

‘’கொடநாட்டில் உள்ள ஆவணங்களைக் கைப்பற்றவே கொள்ளை நாடகம் நடந்துள்ளது. ஆவணங்கள் எடப்பாடி பழனிசாமியின் கைக்கு வந்ததும் தொடர்புடையவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்” என்று சொல்லி இருக்கிறார் பத்திரிகையாளர் மேத்யூ. இதற்கும் முதலமைச்சர் பதில் சொல்லாமல் கழுவிய மீன்களில் நழுவிய மீனாக இருக்கிறார். “கொடநாடு எஸ்டேட்டில் கொலை நடந்ததில் இருந்தே யாரிடமும் தினேஷ் சரியாகப் பேசவில்லை. தற்கொலை செய்துகொண்ட நாளில் யாரிடமோ தினேஷ் அதிக நேரம் பேசினார்” என்று தினேஷ் உறவினர்கள் சொல்கிறார்கள். இதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார்?

சயன், மனோஜ் ஆகிய இருவரின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் சொல்லாத முதலமைச்சர், இவர்கள் இருவருக்கும் ஜாமின் வாங்கிக் கொடுத்த வழக்கறிஞர்கள் குறித்து வேண்டுமென்றே அவதூறு கிளப்பி வருகிறார். அந்த வழக்கறிஞர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்று ஏதோ பெரிய கண்டுபிடிப்பைச் செய்தவர் போலக் காட்டி வருகிறார்.

 

குற்றம் சாட்டப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வாதாடுவது வழக்கறிஞர்களின் தொழில். அதற்காக அந்தக் குற்றவாளிக்கும் வழக்கறிஞருக்கும் தொடர்பு என்று சொல்ல முடியுமா? அதுவும் இந்த நாட்டின் முதலமைச்சர் சம்பந்தப்பட்ட ஒரு கிரிமினல் வழக்கு அது. சயனுக்கோ மனோஜ் என்பவருக்கோ கனகராஜ்க்கு ஏற்பட்ட நிலைமை ஏற்பட்டு விடக்கூடாது அல்லவா? அவர்களைப் பாதுகாப்பது என்பது சட்டப்படியான நடவடிக்கை தான். அதனை எந்த வழக்கறிஞரோ, ஏன் திமுக வழக்கறிஞரே செய்திருந்தாலும் தவறு அல்ல. அவர்கள் நீதிமன்றத்தில் தான் உதவி செய்கிறார்களே தவிர, வேறு உதவிகள் செய்யவில்லை என்பதை முதலமைச்சர் உணர வேண்டும்; தனது கடந்த காலத்தையும் கொஞ்சம் எண்ணிப்பார்க்க வேண்டும். இது போன்ற சிறு பிள்ளைத்தனமான கண்டு பிடிப்புகளைச் செய்து, நாட்டு மக்களின் நகைப்புக்கு ஆளாவதை விட்டுவிட்டு விசாரணையை அவர் எதிர் கொள்ளத் துணிய வேண்டும்.

எனக்கு எந்த பயமும் இல்லை என்று வாயால் சொல்லிக் கொண்டே, இது தொடர்பான செய்திகளை வெளியிடும் மீடியாக்களை கடைந்தெடுத்த கோழைத்தனத்தோடு ஒரு முதலமைச்சர் மிரட்டுகிறார்.

தொலைக்காட்சி சேனல்களின் கேபிள் வயர்களை துண்டிப்பதாக வேறு தகவல்கள் வருகிறது. இதைவிடக் கீழ்த்தரமான செயல் வேறு உண்டா? யோக்கியர் என்றால் எதற்காக பயப்பட வேண்டும்? முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டுகளையெல்லாம் வரிசைப்படுத்தித் தொகுத்து ஆளுநரிடம் மனுவாகக் கொடுத்துள்ளோம். குடியரசுத்தலைவருக்கோ மத்திய அரசுக்கோ அவர் அனுப்பினாரா, விசாரித்தாரா என்று தெரியவில்லை.

இதுவரை அனுப்பாவிட்டால் இனியாவது அவர் அனுப்ப வேண்டும் என்று சட்டம் அறிந்தவர்கள் எதிர்பார்க்கிறார்கள், நாங்களும் எதிர்பார்க்கிறோம்.

எடப்பாடி பழனிசாமியின் இரண்டு நாள் பேச்சுகள் குற்றம் நடந்திருப்பதையும் அவர் நேரடியாகவே தில் சம்பந்தப்பட்டு இருப்பதையுமே நிரூபிக்கின்றன. இன்னமும் ஒரு மணிநேரம் கூட முதலமைச்சர் பதவியில் நீடிக்க அருகதையற்றவராக அவர் ஆகிவிட்டார். இப்படிப்பட்ட ஒருவருக்கு முதலமைச்சர் பதவி ஒரு கேடா என்று தமிழக மக்கள் கேட்பது, அவர் செவிகளைத் செந்தேளாகக் கொட்டவில்லையா?

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
Tag Clouds