லோக்சபா தேர்தலுக்கான திமுக கூட்டணியில் பாமக வேண்டாம் எனில் திருமாவளவனும் இடம்பெற தேவையில்லை.. திருமாவளவன் இல்லாமல் இருந்தாலே வன்னியர் வாக்குகள் நமக்கு வந்துவிடும் என அக்கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் திமுக மூத்த தலைவர்கள் துரைமுருகன், குறிஞ்சிப்பாடி எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
இதைப் பற்றிப் பேசிய அவர்கள், வட மாவட்டங்களில் தனிப்பட்ட செல்வாக்கை வளர்த்து வைத்திருக்கிறார் ராமதாஸ். அன்புமணியை முன்னிறுத்தி ஸ்டாலினுக்கு எதிரான வாக்குகளை அவர் பிரித்தார்.
இப்போதும் அவர் ஸ்டாலினுக்கு எதிரான வாக்குகளைத்தான் பிரிப்பார். நம்மோடு கூட்டணி வைத்தால் 3 சீட் கிடைத்தால்கூட ஜெயித்துவிடலாம்...எடப்பாடியை நம்பி வெற்றி பெற முடியாது என அன்புமணி நினைக்கிறார்.
அவரது நினைப்புக்கு நாம் தீனி போட வேண்டிய அவசியம் இல்லை. வடக்கில் நாம் வெற்றி பெற ராமதாஸ், திருமாவளவன் போன்ற சாதிக்கட்சிகள் நமக்குத் தேவையில்லை. திமுக, காங்கிரஸ் அணியே பெருவாரியாக வெற்றி பெறும்.
நம்மைத்தான் மக்கள் அதிகம் நம்புகிறார்கள். விசிக இல்லாவிட்டால், வன்னிய சமூக வாக்குகளும் நமக்கு தானாக வந்து சேரும்' என வலியுறுத்தியுள்ளனர். தேர்தல் தேதி நெருங்குவதற்குள், திமுக அணியில் இருந்து திருமாவளவனைப் பிரிக்கும் வேலைகள் ஜரூராக நடந்து வருகிறதாம்.
-அருள் திலீபன்