பாஜக, பாமக உடன் கூட்டணி அமைத்த பிறகு அதிமுக தலைமையில் கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் சென்னையில் உள்ள கிளாம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மோடி ஓபிஎஸ், இபிஎஸ், ராமதாஸ், அன்புமணி, தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய, பிரதமர் மோடி, நகரங்களில் சிறந்த காஞ்சிபுரத்தில் இருக்கிறோம்; செம்மொழிகளில் முதன்மையானது தமிழ் மொழி - தமிழ் மொழி மிக அழகானது. தமிழக மக்களின் பண்பாடும், கலாச்சாரமும் சிறப்புடையது; காசி எம்.பி யாக உள்ள நான் இன்று காஞ்சிபுரம் வந்தததில் மகிழ்ச்சி. ரயில் மற்றும் நெடுஞ்சாலை திட்டங்கள் நகரங்களை இணைத்து, பயண நேரங்களை குறைக்கும். 66 நாடுகளுடன் இ-விசா வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா கண்ட கனவில் முன்னேற்றத்துடன் நாம் பயணிக்கின்றோம்.
தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழர்கள் எங்கிருந்தாலும் பிரச்னை என்றால் முதலில் நடவடிக்கை எடுப்பது மத்திய பாஜக அரசுதான். தமிழக மீனவர்கள் 1,900 பேரை மத்திய அரசு மீட்டுக் கொண்டு வந்துள்ளது. யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை நான் பெற்றுள்ளேன். இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு மத்திய அரசு சார்பில் 14 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும். தமிழகத்திற்கு வந்து செல்லும் விமானங்களில் அறிவிப்புகளை தமிழிலேயே அறிவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்தியாவை பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி முனையமாக்குவது எங்கள் நோக்கம். தமிழகத்தில் அமையும் பாதுகாப்பு தொழில்பூங்கா தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும்.
சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும். நாட்டின் பாதுகாப்பில் எதிர்கட்சிகள் அலட்சியம் காட்டிவருகின்றன. வலிமையான ராணுவத்தை அவர்கள் விரும்பவில்லை. சர்வாதிகாரம் மற்றும் குடும்ப ஆட்சியை எதிர்த்ததால் காமராஜரை, காங்கிரஸ் கட்சி அவமானப்படுத்தியது. திமுக உட்பட பல்வேறு அரசுகளை காங்கிரஸ் அரசு கலைத்தது. சந்தர்பவாத அரசியலால் திமுக, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்துள்ளது. என்னை பற்றிய விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் நாட்டின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுகிறேன். எனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும் இந்த நாட்டு மக்களுக்காகவே. மக்களின் ஆசிர்வாதத்துடன் இன்னும் நிறைய செய்ய காத்திருக்கிறேன். "நாற்பதும் நமதே, நாடும் நமதே" என தமிழில் உரையை முடித்தார்.