திருப்பூருக்கு மோடி எந்த திட்டத்தையுமே அறிவிக்கவே இல்லை... அடித்து சொல்லும் ஆட்சியர் அலுவலகம்- பொதுமக்கள் 'பகீர்’

திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக் கூட்டத்தில் கடந்த பிப்ரவரி 10ம் தேதி கலந்து கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. இந்தக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

ஆனால் அப்படி எதுவுமே தொடங்கி வைக்க அவர் வரவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாகத் தெரிய வந்துள்ளது.

பிரதமர் மோடியின் திருப்பூர் விசிட்டின்போது அவர் பேசியதாவது:

திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை என துணிச்சலுக்கும், தைரியத்துக்கும் பெயர் பெற்ற மண் இது. இவர்களின் வாழ்க்கை இந்த நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை வழங்கி கொண்டிருக்கிறது.

உலக நாடுகளுக்கு உதாரணமாக திகழ்கிறது திருப்பூர். தொழில்முனைவோர் மற்றும் அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் மக்களை பெற்றுள்ள பகுதி திருப்பூர்.

நாடு முழுவதும் உதாரணமாக திகழ்கிறது திருப்பூர்.
இந்திய அரசு செயல்படும் முறை மாறி உள்ளது. முந்தைய அரசு, நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு எதுவும் செய்யவில்லை. தரகர்களின் நலனுக்காக அவர்கள் செயல்பட்டு வந்தார்கள்.

கடல் முதல் ஆகாயம் வரை காங்கிரஸ் கட்சியில் ஊழல் இருந்தது. நாம்பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு பெற்றவராக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.

இந்தியாவில் புதிய இரண்டு பாதுகாப்பு தொழில்நுட்ப பூங்காக்கள் அமைய உள்ளன. அதில் ஒன்று தமிழகத்தில் அமைய உள்ளது. இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிக அளவில் கிடைக்கும் எனக் குறிப்பிட்டார்.

மேடையில் பேசுவதற்கு முன்னதாக, பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த இடம் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையிலிருந்து மத்திய அரசின் திட்டங்களை தொடங்கிவைத்தார். திருப்பூரில் 100 படுக்கைவசதிகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. மருத்துவமனை, சென்னை மற்றும்திருச்சி விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

சென்னை கே.கே. நகரில் இ.எஸ்.ஐ.சி. மருத்துவக் கல்லூரி மற்றும் 470 படுக்கை வசதிகளுடன் கூடிய இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனை, எண்ணூரில் கடற்கரை துறைமுகம், சென்னை துறைமுகம் முதல் மணலி சுத்திகரிப்பு நிலையம் வரை புதிய கச்சா எண்ணெய் குழாய் பதிப்பு திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

சென்னை மெட்ரோ முதல்கட்ட பயணிகள் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தக் கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சட்டப்பேரவைத் தலைவர் தனபால், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மோடியின் வருகை குறித்து ஆர்.டி.ஐ மூலமாக வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பின் முகமது கவுஸ் என்பவர், திருப்பூர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் கீதா பிரியா என்பவருக்குக் கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்குக் கிடைக்கப்பட்ட பதிலில், பிரதமரின் பெருமாநல்லூர் வருகையின்போது புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவல் பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- அருள் திலீபன்

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்