வேட்பாளர் நேர்காணலில் தீவிரம் காட்டி வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்தமுறை உதயசூரியன் சின்னத்தில் நிற்க இருக்கிறது மதிமுக.
ஈரோட்டில் கணேசமூர்த்தியை நிறுத்தத் திட்டமிட்டிருக்கிறார் வைகோ. இதனை இன்று நடந்த நேர்காணலிலும் சுட்டிக் காட்டியிருக்கிறார் ஸ்டாலின்.
அதேபோல், கழகம் சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களின் பின்னணியையும் தீவிரமாக அலசுகிறார்கள். ' தொகுதிக்கு 50 கோடி ரூபாய் வரையில் சொந்தப் பணத்தை செலவு செய்பவர்களுக்கே சீட்' என அண்ணா அறிவாலயத்தில் இருந்து தகவல் சென்றுள்ளது.
இதனை அறிந்து வாரிசுகளை முழுவீச்சில் களமிறக்கத் திட்டமிட்டுள்ளனர் சீனியர் நிர்வாகிகள். கள்ளக்குறிச்சி தொகுதிக்கு யார் வேட்பாளர் என்பதை தலைமை இன்னமும் உறுதி செய்யவில்லை.
அதற்குள் உங்கள் வேட்பாளர் கவுதம சிகாமணி என்ற பெயரில் விளம்பரங்களை அச்சிடத் தொடங்கிவிட்டனர் பொன்முடி ஆதரவாளர்கள். அதேபோல், பொள்ளாச்சி தொகுதியின் தன்னுடைய மகன் பாரி அல்லது மருமகன் கோகுலுக்கு சீட் கிடைக்க வேண்டும் என அறிவாலயத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி.
தலைமையிடம் பணம் கேட்காமல் தொகுதிகளுக்கான முழு செலவையும் பார்த்துக் கொள்பவர்களுக்கே முன்னுரிமை என்பதால், இந்தமுறை உறுதியாக சீட் வாங்கிவிடலாம் என பலரும் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். ' அப்பாவுக்கு சீட், மகனுக்கு சீட், மருமகனுக்கு சீட் எனத் தரம் பிரித்துக் கொடுப்பதால், உண்மையான தொண்டர்களுக்கு என்ன மரியாதை' என்ற குமுறல்களும் உடன்பிறப்புகள் மத்தியில் ஒலிக்கிறது.