காஞ்சிபுரம் தொகுதிக்கான நேர்காணல் திமுகவில் நாளை நடக்க இருக்கிறது. இதே தொகுதியைக் கேட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கோரிக்கை வைத்திருக்கிறது.
கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டு திமுகவுக்கான வெற்றி வாய்ப்பைப் பறித்தார் மல்லை சத்யா. இந்தமுறை கூட்டணிக் கட்சி என்ற அடிப்படையில் மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
ஆனால் ஈரோடு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுவிட்டதால், அமைதியாகிவிட்டார். இதனை அறிந்து காஞ்சிபுரம் தனித் தொகுதியை ஒதுக்குங்கள் எனக் கோரிக்கை வைத்திருக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன்.
அவரது இந்தக் கோரிக்கைக்கு காஞ்சிபுரம் உடன்பிறப்புகள் செவிசாய்க்க மறுக்கின்றனர். இதைப் பற்றி ஸ்டாலினிடம் பேசிய காஞ்சிபுரம் மாவட்ட திமுகவினர், நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் சீட் ஒதுக்குங்கள். அவர்களுடைய வெற்றிக்காக நாங்கள் பாடுபடுகிறோம்.
ஆனால் போட்டியிடுகிறவர், கண்டிப்பாக உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும். கடந்தமுறை நம்முடைய வெற்றி சொற்ப வாக்கு வித்தியாசத்தில் பறிபோனது. அதிமுகவின் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதால் தொகுதி மக்களுக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை.
உதயசூரியன் சின்னமே கடந்த பல ஆண்டுகளாக வெற்றி பெறாததால் தொகுதி மக்களும் நம்மை மறந்துவிட்டனர். எனவே யாருக்கு வேண்டுமானாலும் சீட் கொடுங்கள். போட்டியிடக் கூடிய நபர், நிச்சயமாக உதயசூரியன் சின்னத்தில்தான் களம் காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இப்படியொரு கோரிக்கையை ஆச்சரியத்துடன் கவனிக்கின்றனர் திமுக சீனியர்கள்.
எழில் பிரதீபன்