பொள்ளாச்சி சம்பவம் தமிழகத்தையே உலுக்கிக்கொண்டிருக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதற்காக அரசு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து நேற்று முன்தினம் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன். அதில், அதிமுக அரசை கடுமையாக சாட்டியிருந்தார். ``பொள்ளாச்சி சம்பவ ஆடியோவைக் கேட்டது முதல் மனசு பதறுது. அந்தப் பொண்ணோட குரலில் இருந்த அதிர்ச்சி, பயம் , தவிப்பு திரும்பத் திரும்ப காதுல கேட்குது. நிர்பயா வுக்கு நடந்த கொடுமைக்கு எதிராக ஊர் உலகமே ஒன்றாக திரண்டது. அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் ஒரு அறிக்கை விட்டார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கொடூரக் குற்றங்களாக கருதப்பட்டு உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்றார். அந்தப் பெண்மணியின் பெயரால் ஆட்சி செய்யும் இந்த அரசு எப்படி கவனக்குறைவாக இருக்கிறது. பெண்ணைப் பெற்ற அத்தனை பேருக்கும் பதறுகிறது.
உங்களுக்குப் பதறவில்லையா. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என்று கூறுவதில் மும்முரம் காட்டுகிறீர்கள். ஆனால் தவறு செய்தவர்களுக்கு தண்டனை உறுதி செய்யப்படும் என்று கூறுவதில் உறுதி காட்டவில்லையே. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக கேட்கவில்லை. 2 பெண்ணோட அப்பாவாக கேட்கிறேன்.. என்ன பண்ணி இந்த தப்புகளுக்கு பரிகாரம் செய்யப் போகிறீர்கள்.எவனாவது இதுபோல செய்ய நினைத்தால் அரசாங்கம் விடாது என்ற நம்பிக்கையை கொடுக்க வேண்டும்எப்ப செய்யப் போறீங்க.. இன்னும் எதுக்காக காத்திருக்கீங்க.. தேர்தல் முடியட்டும் என்றா. இரு பெரும் காப்பியங்களான மகாபாரதமும், ராமாயணமும் பெண்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்க நடந்த போர்கள் பற்றியது. உங்க அம்மாவுக்கே ஏற்பட்டுள்ள அவமானம் இது.. எப்படி துடைக்கப் போறீங்க சாமி" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியிருந்தார் கமல். இந்த வீடியோ வைரலானது.
இதற்கிடையே இந்த வீடியோ வெளியிட்ட கமலை தாறுமாறாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளது நமது அம்மா நாளிதழ். காமஹாசனும் கதாகாலட்சேபமும் என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், ``தவறு இளைத்தவர்கள் யாராக இருந்தாலும் ஈவு இரக்கமின்றி, சட்டத்தின் மூலம் தண்டிக்க உறுதி கொண்டிருக்கும் இந்த கழக அரசின் வெளிப்படையான நடவடிக்கைகளை மனசாட்சி உள்ளோர்கள் உளமாற பாராட்டுகிறார்கள். ஆனால் இவர் போன்ற கழகத்தின் மீது வன்மம் கொண்டு அலையும் கழிசடைகள் மட்டுமே உள்நோக்கம் கற்பிக்க வெறிபிடித்து அலைகிறார்கள். குற்றம் இழைத்த பாதகர்கள் அனைவருமே கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுவிட்டனர்.
தெளிவான நடவடிக்கைகள் ஒளிவு மறைவு இல்லாமல் தொடர்கிற நிலையில், வழக்கை சிபிஐ விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் ஆளும் அரசு மீது அவதூறு பரப்புவதற்கு இதுவே தருணம் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிற திமுக போன்ற இடுப்புகிள்ளிகளோடு இந்த காமஹாசனும் கைகோர்க்கிறார் என்றால் இது தேர்தல் நேரத்து நரித்தனங்களே."என்று குறிப்பிட்டதுடன், ``ஜெயலலிதா மரணச் செய்தியை அடிமனதில் கொண்டாடிய கமல்ஹாசன் பொள்ளாச்சி விவகாரத்தில் கமல்ஹாசன் உள்நோக்கம் கற்பிப்பதில் புதுமை ஒன்றும் இல்லை. கமல்ஹாசனை விட்டு நடிகை கவுதமி பிரிந்து சென்றதற்கான உண்மையான காரணத்தை தெரிவித்து விட்டு, பாலியல் குற்றங்கள் குறித்து கமல்ஹாசன் கதாகாலட்சேபம் நடத்தலாம்" எனக் கடுமையாக விமர்சித்துள்ளது.