நல்லூர் சுங்க சாவடியை நேற்று அடித்து நொறுக்கிய விவகாரம் தொடர்பாக மொத்தம் 5 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழவரத்தை அடுத்த நல்லூர் சுங்கச் சாவடியில் வட மாநில ஊழியர்கள் பணியில் உள்ளனர். நேற்று அந்த வழியாகச் சென்ற வேன் ஓட்டுநர்கள் இருவரிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் விவகாரத்தில் சுங்கச் சாவடி ஊழியர்களுக்கும் வேன் ஓட்டுநர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக சுங்கச்சாவடி ஊழியர்கள் வேன் ஓட்டுநர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தகராறு காரணமாக சுங்கக் கட்டணம் வசூலித்து பிற வாகனங்களை அனுப்பி வைக்கும் பணி பாதிக்கப்பட்டதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
அதனால் வாகன ஓட்டுனர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
இதனையடுத்து வாகனம் ஓட்டுநர்கள் ஒன்றாகச் சேர்ந்து சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் வேன் ஓட்டுநர்களை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் சுங்கச்சாவடி ஊழியர்கள் ராஜேஸ் ஷா, சமீர் கோஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதேசமயம் சுங்கச்சாவடி அடித்து நொறுக்கிய புகாரில் ஓட்டுநர்களான சலீம், பாபு மற்றும் இளையராஜா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.