இலங்கை குண்டுவெடிப்பில் ஒரு பணக்கார வியாபாரியின் 2 மகன்கள் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் அடுத்தடுத்து பயங்கர குண்டுகள் வெடித்தன. இந்த தொடர் குண்டுவெடிப்பில் 359 பேர் உயிரிழந்துள்ளனர். 500 பேர் வரை காயமடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்புகளுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்(இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் சிரியா அண்ட் ஈராக்) தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் இந்த தீவிரவாதிகள் தற்போது பல நாடுகளிலும் தங்கள் கைவரிசையை காட்டத் தொடங்கியுள்ளனர். அவர்கள் ஆசிய நாடுகளில் உள்ள இஸ்லாமிய இளைஞர்களை குறிவைத்து ஆன்லைனில் இழுத்து மூளைச்சலவை செய்கிறார்கள். அதன்பின், அவர்களை சிரியாவுக்கு வரவழைத்து பயிற்சி கொடுத்து அனுப்பி அந்தந்த நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துகின்றனர். இப்படித்தான் இலங்கையிலும் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களை ஐ.எஸ். அமைப்பு செய்திருக்கிறது.
கொழும்பில் ஒரு பணக்கார வியாபாரியின் குடும்பம், ஐ.எஸ். அமைப்புக்கு துணை போனது தெரிய வந்திருக்கிறது. முகமது இப்ராகீம் என்ற அந்த பருப்பு வியாபாரிக்கு 6 மகன்கள், 3 மகள்கள். இவர்களில் இன்சாப் இப்ராகீம் என்ற மகன்தான், ஈஸ்டர் தினத்தன்று காலையில் ஷாங்ரி லா நட்சத்திர ஹோட்டலுக்குள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவன். அவன் பயங்கர வெடிகுண்டுகளுடன் அந்த ஹோட்டலுக்குள் காலை உணவு சாப்பிட்டு கொண்டிருப்பவர்கள் மத்தியில் சென்று வெடிக்கச் செய்தான். சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் மூலம் போலீசார் அவனை அடையாளம் கண்டு விட்டனர்.
இதன்பின், அவனது சகோதரன் இன்சாம் இப்ராகீம் வீட்டு போலீசார் சென்ற போது, இன்சாம் அங்கு குண்டுவெடிக்கச் செய்தான். அதில் அவனும், அவனது மனைவி மற்றும் 3 குழந்தைகளும் பலியாகி விட்டனர். இதன்பின், வியாபாரி முகமது இப்ராகீமை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த தகவல்கள் இலங்கைப் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன. ஆனாலும் இலங்கை பாதுகாப்பு படையினரோ, போலீசாரோ இந்த தகவல்களை வெளியிடவில்லை.
இந்நிலையில், முகமது இப்ராகீமின் அண்டை வீட்டார்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாசிலா என்பவர் ராய்ட்டர் செய்தியாளரிடம் கூறுகையில், ‘‘முகமது இப்ராகீம் பெரிய பணக்காரர். அவர் இப்பகுதியில் ஏழைகளுக்கு உதவுவார். அவரது மகள்கள் நன்றாக பழகுவார்கள். அவர்கள் அனைவருமே மிகவும் நல்லவர்களாக தெரிந்தார்கள். அவர்களா இப்படி செய்தார்கள் என்று நினைத்து பார்க்கும் போதே குலை நடுங்குகிறது. இவர்களால்தான், உண்மையில் நல்லவர்களாக இருக்கும் இஸ்லாமியர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இது மிகக் கொடுமையானது’’ என்றார்.
சஞ்சீவா ஜெயசிங்கே கூறுகையில், ‘‘அவர்கள் மிக நல்லவர்கள் போல் நடித்தார்கள். ஆனால், இவ்வளவு பயங்கரவாதிகள் என்று எதிர்பார்க்கவே இல்லை’’ என்றார்.