தமிழகத்தில் பா.ஜ.க. வேரூன்ற முடியுமா? தேர்தல் முடிவு சொல்வது என்ன?

what is the future plan of bjp in tamilnadu?

by எஸ். எம். கணபதி, May 25, 2019, 10:27 AM IST

தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியான அ.தி.மு.க.வுடன் மட்டுமின்றி வேறு சில கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட்ட பா.ஜ.க.வால் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை. இதனால், தமிழகத்தில் பா.ஜ.க.வால் வேரூன்ற முடியுமா என்ற விவாதங்கள் மீண்டும் அரசியல் அரங்கில் எழுந்துள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்கு ஓராண்டுக்கு முன்பே பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, ஒவ்வொரு மாநிலமாக சென்று அங்குள்ள நிலைமைகளை அறிந்து அதற்கேற்ப புதுப்புது யுக்திகளை கையாளத் தொடங்கினார். அவரது ராஜதந்திரம், தேர்தல் பார்முலா எல்லாம் வடமாநிலங்களில் மிகச் சரியாக வேலை செய்துள்ளன. ஆனால், தமிழ்நாடு, கேரளா போன்ற தென்மாநிலங்களில் அது பலிக்கவில்லை. காரணம், இங்கு பா.ஜ.க.வுக்கு அடித்தளம் இல்லை. அதே சமயம், கர்நாடாகாவில் அமித்ஷாவின் கணக்கு வென்றுள்ளது.

தமிழகத்தில் ஆளும் கட்சியாகவும், மிகப் பெரிய கட்சியாகவும் உள்ள அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தாலே ஓரிரு இடங்களை வென்று விடலாம் என்று பா.ஜ.க. கருதியது.

ஆனாலும், அதை மெகா கூட்டணியாக அமைத்து விட்டால், அதிக இடங்களை கைப்பற்றி விடலாம் என்று அமித்ஷா திட்டமிட்டார். இந்தப் பொறுப்பை மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் ஒப்படைத்தார். அவரும், அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சிகளை சேர்த்து மெகா கூட்டணியை அமைத்தார். ஆக, இந்த கட்சிகளுக்கான வாக்கு வங்கியே பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகளில் இந்த அரித்மேட்டிக் கணக்கு வேலை செய்யவில்லை.

இதற்கு காரணம், தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருந்ததுதான். அந்த எதிர்ப்பு அலை மற்ற கட்சிகளையும் காலி செய்து விட்டது. அது எப்படி? தமிழகத்தைப் பொறுத்தவரை எப்படி கூட்டணி அமைத்தாலும் அந்த கட்சித் தொண்டர்களின் வாக்குகள் வேண்டுமானால், அப்படியே விழலாம். கட்சிகளுக்கு அனுதாபிகளாக இருப்பவர்கள், தங்கள் விருப்பத்திற்கு மாறாக அந்த கட்சி முடிவெடுத்தால் எதிர்த்து வாக்களிப்பார்கள். அப்படித்தான், பா.ஜ.க.வுக்கு எதிராக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

இதை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை கூர்ந்து கவனித்தாலே நாம் உணரலாம். தர்மபுரி மக்களவை தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. ஆனால், அதற்கு உட்பட்ட அரூர், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தி.மு.க. தோற்றிருக்கிறது. அதே போல், விருதுநகர் மக்களவை தொகுதியில் தி.மு.க. அணியின் மாணிக் தாகூர் வெற்றி பெறுகிறார். அந்த தொகுதிக்கு உட்பட்ட சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. தோற்றுள்ளது.

தூத்துக்குடியில் கனிமொழி வென்றாலும், அதற்கு உட்பட்ட விளாத்திகுளத்தில் திமுக தோற்றிருக்கிறது. கோவையில் கம்யூனிஸ்ட் நடராஜன் வென்றாலும், அதற்கு உட்பட்ட சூலூரில் திமுக தோற்றுள்ளது. இதே போல், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் வென்றாலும் அதற்கு உட்பட்ட மானாமதுரையில் திமுகவுக்கு தோல்வி. திண்டுக்கல், ராமநாதபுரம், அரக்கோணம் மக்களவை தொகுதிகளில் திமுக அணி வென்றாலும், அவற்றுக்கு உட்பட்ட நிலக்கோட்டை, பரமக்குடி, சோளிங்கரில் திமுகவுக்கு தோல்வி.

ஆகவே, அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க விரும்பும் அக்கட்சியின் அனுதாபிகள், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மட்டும் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஆனால், பா.ஜ.க. கூட்டணியை அவர்கள் விரும்பாததால், மக்களவை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக தி.மு.க.வுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதே உண்மை. இதை, ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறங்கிய நயினார் நாகேந்தின் அ.தி.மு.க. வேட்பாளராக இரட்டை இலையில் நின்றிருந்தால் வெற்றி பெற்றிருப்பார் என்று அ.தி.மு.க.வினர் பேசுவதில் இருந்தே நாம் புரிந்து கொள்ளலாம்.

எனவே, தமிழகத்தில் பா.ஜ.க. வேரூன்ற நினைத்தால், மெகா கூட்டணி யுக்திகளை கைவிட்டு புதிய பாதைக்கு திரும்ப வேண்டும். குறிப்பாக, தமிழகத்தின் காவிரிப் பிரச்னை உள்பட முக்கிய விஷயங்களில் மத்திய பா.ஜ.க. அரசு அதிக கவனம் செலுத்தி, தனக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும். அதற்கு அமித்ஷா புதிய பார்முலாவை உருவாக்குவாரா? அல்லது ரஜினியை அழைத்து சட்டசபைத் தேர்தலில் மீண்டும் மெகா கூட்டணியை உருவாக்குவாரா? என்பதெல்லாம் போகப் போகத் தெரியும்.

You'r reading தமிழகத்தில் பா.ஜ.க. வேரூன்ற முடியுமா? தேர்தல் முடிவு சொல்வது என்ன? Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை