நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்த பாக்யராஜ் அணி சதித் திட்டமா?

bakiyaraj team trying to cancel actors association election

by எஸ். எம். கணபதி, Jun 15, 2019, 12:32 PM IST

நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துவதற்கோ, தள்ளிப் போடுவதற்கோ பாக்கியராஜ் அணி சதித் திட்டம் போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதி, சென்னை அடையாரில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் செயல்படுகிறார். இந்த தேர்தலில் பாண்டவர் அணி என்ற பெயரில் விஷால் டீம் மறுபடியும் களமிறங்கியுள்ளது. அந்த அணியை எதிர்த்து பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி போட்டியிடுகிறது.

தலைவர் பதவிக்கு பாண்டவர் அணியில் நாசரும், சங்கரதாஸ் அணியில் பாக்யராஜும் போட்டியிடுகின்றனர். துணை தலைவர் பதவிக்கு பூச்சிமுருகனை எதிர்த்து குட்டிபத்மினியும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியை எதிர்த்து பிரசாந்த்தும் போட்டியிடுகின்றனர்.

தேர்தலில் பாக்கியராஜ் அணி களமிறங்கியதும் போட்டி கடுமையாகி, பல பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பாக்கியராஜ் அணியினர் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்டனர். அப்போது, பாக்கியராஜ் கூறுகையில், ‘‘மோடி எப்படி ‘சவுக்கிதார்’ என்று சொல்லி களமிறங்கினாரோ, அதே போல் நாங்களும் களமிறங்கி உள்ளோம்’’ என்று பாஜக மற்றும் ரஜினி ஆதரவு தங்களுக்கு உள்ளது போல் பேசினார். அடுத்து, கமல், விஜயகாந்த் ஆகியோரையும் அவர்கள் சந்தித்து ஆதரவு கோரினர்.

இதன்பின், விஷால் அணியும் சுறுசுறுப்பாகி, ரஜினி, கமல் ஆதரவு தங்களுக்கு உள்ளதாக கூறியது. அதன்பின், விஷால் தங்கள் அணிக்கு வாக்கு கேட்டு ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் கடந்த முறை பிரச்சாரம் செய்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அது நடிகர் சரத்குமாரையும், ராதாரவியையும் தாக்கிப் பேசிய காட்சிகள்.

இந்்த வீிடியோவைப் பார்த்ததும், விஷாலை கடுமையாக தாக்கி வரலட்சுமி சரத்குமார் ஒரு ட்விட் போட்டார். அதில் விஷாலை தாக்கியதுடன், ‘‘உங்கள் அணியில் இருந்தவர்களே பிரிந்து சென்று உங்களுக்கு எதிராக நிற்கிறார்கள் என்றால், உண்மை நிலவரம் என்னவென்பது புரிகிறது’’ என்று மட்டம் தட்டியிருந்தார்.

அடுத்தடுத்த காட்சிகளால், இந்த தேர்தலில் எந்த அணி வெற்றி பெறுமோ என்று நடிகர்களிடம் பதற்றம் தொற்றியிருந்தது. இந்த சூழ்நிலையில், தேர்தல் நடைபெறுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

அதாவது, காவல் துறையின் சார்பில் நடிகர் சங்கத்திற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், ‘‘தேர்தல் நடைபெறும் கல்லூரியானது, முதலமைச்சர், அமைச்சர்கள், நீதிபதிகள் போன்ற வி.ஐ.பி.க்கள் கடந்து செல்லும் சாலையில் உள்ளது.

மேலும், நடிகர் சங்கத்தின் 8 ஆயிரம் உறுப்பினர்கள் பங்கேற்று தேர்தல் நடைபெறும் போது அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டால், அது வி.ஐ.பி.க்களின் போக்குவரத்திற்கு சிக்கல்களை ஏற்படுத்தும்’’ என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே, தேர்தலை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென்று காவல் துறை பிரச்னையை கிளப்புகிறது. குறுகிய கால அவகாசமே இருப்பதால், வேறு ஒரு இடம் பிடிப்பதில் சிக்கல் இருக்கிறது. எனவே, தேர்தலை தள்ளி வைக்கும் சூழல் தெரிகிறது.

அடுத்து இன்னொரு சிக்கலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, எஸ்.வி.சேகர், ஏழுமலை உள்பட 61 பேர் அரசு பதிவாளரிடம் ஒரு புகார் அளித்துள்ளனர். அதாவது, சங்கத்தில் விதிகளை மீறி ஏராளமான உறுப்பினர்களை நீக்கியிருப்பதால், ேதர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். சங்கங்களுக்கு பதிவு செய்து, ஒழுங்குபடுத்தும் பொறுப்பு தமிழக அரசின் பதிவாளர் துறையிடம் தான் உள்ளது என்றாலும், சங்கத் தேர்தல்களில் தலையிடுவதற்கு பதிவாளருக்கு அதிகாரம் இருப்பதாக தெரியவில்லை.

எனவே, தேர்தலை ரத்து செய்ய அவர் உத்தரவிட முடியாது. ஆனால், உறுப்பினர்கள் நீக்கத்தில் சங்க விதிகள் மீறப்பட்டுள்ளதா என்பதை மட்டும் அவர் விசாரிக்கலாம். அந்த அடிப்படையில், 61 பேர் அளித்த புகாரில் விளக்கம் கேட்டு நடிகர் சங்கத்திற்கு பதிவாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தற்போது, இந்த விசாரணையைக் காரணம் காட்டி யாராவது உயர்நீதிமன்றத்தை அணுகினால், தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எஸ்.வி.சேகர், விஷாலையும் அந்த அணியையும் எதிர்ப்பவர். அதே போல், பதிவாளர், காவல்துறை நடவடிக்கைகளைப் பார்த்தால் அது அ.தி.மு.க. அரசு ஆதரவு பெற்றவர்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக தெரிகிறது. எனவே, தேர்தலை ரத்து செய்வதற்கோ, தள்ளிப் போடுவதற்கோ பாக்கியராஜ் அணியே சதித் திட்டம் போட்டிருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.

எப்படியோ நடிகர் சங்கத் தேர்தல் தற்போது இடியாப்பச் சிக்கலில் மாட்டியிருக்கிறது. இதையெல்லாம் கடந்து தேர்தல் நடத்தப்படுமா என்பது ஓரிரு நாட்களில் தெரிய வரும்.

‘சவுக்கிதார்’ பாக்யராஜ் அணிக்கு பின்னணியில் எந்த அரசியல் கட்சி?

You'r reading நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்த பாக்யராஜ் அணி சதித் திட்டமா? Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை