பிளாஸ்டிக் பைகள் இருக்கிறதா? கண்காணிப்பு குழுக்கள் சோதனை

Fines imposed on traders whom distributes banned plastic things

by எஸ். எம். கணபதி, Jun 17, 2019, 13:34 PM IST

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால், அபராதம் விதிக்கும் திட்டம் இன்று அமலுக்கு வந்தது. சென்னையில் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து கடைகளில் சோதனை செய்கின்றனர்.

தமிழகம் முழுவதும் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வந்தன. சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இதையடுத்து, கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதில், பிளாஸ்டிக் தட்டு, டீ கப், தண்ணீர் பாக்கெட், மெல்லிய பைகள் ஆகியவை அவற்றில் அடங்கும்.

இதன்பின்னர், சிறிய ஓட்டல்கள், மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் மற்றும் தள்ளு வண்டிகளின் வியாபாரத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், கப்புகள் ஒதுக்கப்பட்டன. பேப்பர் கப்புகள், தாமரை இலை, பனையோலைத் தட்டுகள், மெல்லிய துணிப் பைகள் போன்றவை வரத் தொடங்கின. வாழை இலைக்கும் மவுசு கூடியது. ஆனால், தேர்தல் சமயத்தில் அரசு கெடுபிடிகள் குறைந்ததால், பல இடங்களில் மீண்டும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

இந்தநிலையில், பிளாஸ்டிக் மீதான தடை உத்தரவை மேலும் துரிதப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினாலோ, விற்பனை செய்தாலோ அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று (ஜூன் 17) முதல் அமலுக்கு வந்தது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்தால், முதல்முறை பிடிபடும்போது ரூ.2 லட்சமும், 2-வது முறை பிடிபடும் போது ரூ.5 லட்சமும் அபராதமாக வசூலிக்கப்படும். மீண்டும் அதே நிறுவனம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தால் அந்த நிறுவனத்திற்கு ‘சீல்’ வைக்கப்படும்.

இதேபோல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைத்தாலோ, வழங்கினாலோ அல்லது எடுத்துச் சென்றாலோ முதல்முறை ரூ.1 லட்சமும், மீண்டும் பிடிபட்டால் ரூ.2 லட்சமும் அபராதம் விதிக்கப்படும்.
பிளாஸ்டிக் பொருட்களை கொடுத்தால் முதல்முறை பிடிபடும்போது ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 2வது முறை பிடிபட்டால் அபராதம் ரூ.1 லட்சமாக உயர்த்தி வசூலிக்கப்படும்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வணிக ரீதியில் பயன்படுத்துவோருக்கு முதல்முறை ரூ.25 ஆயிரமும், 2-வது முறை பிடிபட்டால் ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து அதே தவறை செய்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
சிறிய கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் முதல் முறை ரூ.100, 2-வது முறை ரூ.200, 3-வது முறை ரூ.500 என அபராதம் வசூலிக்கப்படும். அதன் பிறகும் தொடர்ந்து விற்பனை செய்தால் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வீடுகளில் பயன்படுத்தினால் முதல் முறை ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மறுபடியும் பிடிபட்டால் ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கும், வார்டு வாரியாக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களில் உள்ள அதிகாரிகள், கடைகள், ஓட்டல்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருப்பவர்களுக்கு உடனடியாக அபராதம் விதித்து வருகின்றனர்.

அப்பாடா.., மதுரை எய்ம்ஸ்க்கான பணி தொடங்கியாச்சு..., மத்திய குழுவினர் ஆய்வு

You'r reading பிளாஸ்டிக் பைகள் இருக்கிறதா? கண்காணிப்பு குழுக்கள் சோதனை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை