திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் கைரேகை தொடர்பாக ஜெயலலிதாவிடம் கைரேகை பெற எழுத்துப்பூர்வமான எந்த உத்தரவும் தலைமைச் செயலாளரிடம் இருந்து வரவில்லை என்று மருத்துவர் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்தபோது தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து 2 தொகுதிகளுக்கும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் சீனிவேலு பதவி ஏற்கும் முன்பு 2016ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த 3 தொகுதிகளுக்கும் 2016ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. தஞ்சை தொகுதியில் ரெங்கசாமி (அதிமுக.), அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி (அ.தி.மு.க.), திருப்பரங்குன்றத்தில் ஏ.கே.போஸ் (அ.தி.மு.க.), ஆகியோர் வெற்றி பெற்றனர்.
திருபரங்குன்றத்தில் வெற்றிபெற்ற ஏ.கே.போஸ் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டபோது ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால், இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கான அங்கீகாரப் படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது.
இதனால், இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி இடதுகை பெருவிரல் ரேகையை தேர்தல் ஆவண படிவத்தில் வைத்துள்ளார். ஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா? என்பது சந்தேகமாக உள்ளது. எனவே மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டிய போது, உச்சநீதிமன்றத்தில் ஏ.கே. போஸ் முறையிட்டு விசாரணைக்கு தடை வாங்கினார். இதனை அடுத்து, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகச்சாமி ஆணையத்திடம் சரவணன் முறையிட்டார்.
அதன் அடிப்படையில், ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்ற அரசு மருத்துவர் பாலாஜி இரண்டு முறை ஆஜராகி விளக்கமளித்திருந்தார். இந்நிலையில், இன்று மூன்றாவது முறையாக விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.
அப்போது மருத்துவர் பாலாஜி, ஜெயலலிதாவிடம் கைரேகை பெற எழுத்துப்பூர்வமான எந்த உத்தரவும் தலைமைச் செயலாளரிடம் இருந்து வரவில்லை எனவும் சுகாதாரத்துறை செயலாளரின் வாய்மொழி உத்தரவின் அடிப்படையிலே ஜெயலலிதாவிடம் கைரேகை வாங்கியதாக தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.