பருவநிலை மாறும்போது ஒரு சில பூக்கள் திடீரென மலரும், பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால், காகிதப் பூக்கள் மணக்காது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழக நிர்வாகத்திற்காக உள்ள 65 மாவட்டங்களில், இதுவரை 22 மாநகர் மற்றும் மாவட்டங்களைச் சார்ந்த நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், ஊராட்சி வட்ட கழக நிர்வாகிகளையும், கழகத்தின் துணை அமைப்பின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்களையும் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துள்ளேன். சந்திப்பு என்பதை விட உணர்வுகளின் சங்கமம் என்பதே சாலப் பொருத்தமானதாகும்.
ஒவ்வொரு நாளும் மதிய உணவை ஊராட்சிச் செயலாளர்களுடன் அமர்ந்து சாப்பிடும்போது, அவர்களுக்கு ஏற்படும் பெருமையைவிட எனக்கு அதிக மனநிறைவு. கட்சி நிலவரங்களைக் கடந்து, அவர்களின் குடும்ப விவரம், தனிப்பட்ட நலன் ஆகியவை குறித்துப் பேசும்போது, அவர்கள் வெளிப்படுத்தும் அன்பு, மதிய விருந்தை விடவும் சுவையாக இருக்கிறது.
களஆய்வில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் என்னுடன் தனித்தனியாகப் புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அவர்களின் மன உணர்வை அறிந்து, நேரம் கூடுதலானாலும் பரவாயில்லை என ஒவ்வொருவருடனும் படம் எடுத்துக்கொள்ளும்போது, தோழமையுடன் தோளில் கைபோட்டுக் கொள்வதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு வேறெதுவும் ஈடில்லைதான். படம் எடுக்க விரும்புகிறவர்கள் கழகத்தின் தொண்டர்கள் என்றால் நான் தொண்டர்களின் தொண்டனாக நினைத்து அவர்களின் அன்பை அப்படியே அரவணைத்து ஏற்றுக் கொள்கிறேன். தொண்டர்தம் பெருமை சொல்லவும் அரிதே அன்றோ!
கழகத்தை குடும்பக் கட்சி என்று வெளியிலிருந்து விமர்சனம் வரும்போதெல்லாம், இது குடும்பக் கட்சிதான்; பல இலட்சம் குடும்பங்கள் ஒன்றிணைந்து பாடுபடும் கட்சிதான் என்று நெஞ்சம் நிமிர்த்திட சொல்வதற்குக் காரணம், குடும்பப் பாசம் நிறைந்த கொள்கை உறவுகளாக நம் உடன்பிறப்புகள் இருப்பதால்தான். “நம் அனைவரையும் ஒரே தாய் பெற முடியாது என்பதால் தான், தனித்தனித் தாய்க்குப் பிள்ளைகளாகப் பிறந்திருக்கிறோம்", என்று பேரறிஞர் அண்ணா சொன்னதை மறக்க முடியுமா?
பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் வளர்த்துள்ள இந்தக் கொள்கை உணர்வுமிக்க குடும்பப் பாசம் உள்ளவரை, தி.மு.கழகம் எனும் பேரியக்கத்தை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது.
பருவநிலை மாறும்போது ஒரு சில பூக்கள் திடீரென மலரும், பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால், காகிதப் பூக்கள் மணக்காதல்லவா!
திமுக என்பது ஆயிரங்காலத்துப் பயிர். திராவிட மொழிப் பெருமைக்கும்; தமிழ் மக்களின் உரிமைக்கும் உண(ர்)வூட்டும் ஜீவாதாரப் பயிர் இது. அந்தப் பயிரைப் பாதுகாக்கும் வேலியாக உள்ள கோடித் தொண்டர்களில், முன்னிற்கும் தொண்டனாக பெரும் பொறுப்புடன் கழக ஆய்வுக் கூட்டத்தை தொடர்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன் நாளை தனது அரசியல் பிரவேசத்தின் தொடக்கமாக கட்சியின் பெயர், கொடி, கொள்கைகள் அனைத்தையும் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மு.க.ஸ்டாலின், ‘அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால், காகிதப் பூக்கள் மணக்காதல்லவா’ என கூறியுள்ளது கமலை விமர்சிக்கவே என்று அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.