மக்கள் எழுச்சியால்தான் திமுக, அதிமுகவை தோற்கடிக்க முடியும்.. ரஜினி கருத்து

by எஸ். எம். கணபதி, Mar 13, 2020, 10:19 AM IST

மக்கள் எழுச்சியுடன் புரட்சி செய்தால் மட்டுமே திமுக, அதிமுக கட்சிகளை வீழ்த்த முடியும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு, ஒரு விஷயத்தில் எனக்குத் தனிப்பட்ட முறையில் ஏமாற்றம் எனக் கூறியிருந்தேன். நான் கூறிய விஷயங்கள் ஊடகங்களில் பல விதமாக வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த சந்திப்பு. நான் ஏதோ 1996ல் இருந்தே 25 வருடமாக அரசியலுக்கு வருவதாகச் சொல்லிக் கொண்டே இருப்பதாகச் சொல்கிறார்கள். அது தவறு. 2017 டிசம்பர் 30ம் தேதிதான் நான் முதன்முதலில் அரசியலுக்கு வருவதாகச் சொன்னேன். ஆளுமைமிக்க ஜெயலலிதா, திறமையான கலைஞர் ஆகியோர் மறைவுக்குப் பிறகு ஒரு வெற்றிடம் இருப்பதைப் பற்றிக் கூறினேன்.

அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்களை வைத்துள்ளேன். திமுக, அதிமுக கட்சிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன. இதுபோன்ற பதவிகள் தேர்தல் நேரத்தில்தான் தேவை. ஆனால், ஆட்சி வந்ததும், கட்சி பதவிகளே தேவையில்லை. கட்சி பதவியை முழுநேரத் தொழிலாக வைத்துள்ளதால்தான் முறைகேடுகள் நடக்கின்றன.

அரசியலில் இப்போது 50 வயதுக்குக் கீழ் உள்ள எம்எல்ஏக்கள் மிகவும் குறைவு. இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம். இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இளைஞர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும். அதனால் 60 சதவீதம் பேர் இளைஞர்களாகத் திறமையானவர்களுக்கு வாய்ப்பு தருவேன். 30 முதல் 35 சதவீதம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ், நீதிபதிகள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும், பிற கட்சிகளிலிருந்து வரும் நல்லவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதே என் முடிவு. முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கு என்றைக்குமே இருந்ததில்லை. முதல்வராக என்னைக் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் இது பற்றி 1996ம் ஆண்டிலேயே தெரியும். நான் நினைத்திருந்தால் அப்பவே முயற்சி பண்ணியிருக்கலாம். 45 வயசுலேயே பெயர், புகழ், எல்லாம் பார்த்து விட்டேன். அப்பவே வராத பதவி ஆசை 68 வயசுலயா வரும்னு ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

தமிழகத்தில் மாற்று அரசியல் வர வேண்டும். கட்சி பதிவு பண்ணி, கொள்கைகள் அறிவித்து, மாநாடு நடத்தி இந்த தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெற வேண்டாமா? நடிகர் என்ற பிரபலத்தை வைத்துக் கொண்டு 15 முதல் 20 சதவீதம் வாக்குகளைப் பெறுவதற்குத்தான் தேர்தலில் போட்டியிட வேண்டுமா? இதற்காக ரசிகர்கள் தங்கள் சொத்துக்களை விற்று பணத்தைச் செலவழிக்க வேண்டுமா?
நாம் தேர்தல் களத்தில் திமுக, அதிமுக என்ற 2 மிகப் பெரிய ஜாம்பவான்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. திமுக 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாவிட்டாலும் பணபலம், கட்டமைப்பு என்பதுடன், ஸ்டாலின் தானே கலைஞரின் வாரிசு என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதிமுக பணபலம், அதிகார பலம் என குபேரன் பலத்தில் உள்ளது.

எனவே, இந்த 54 ஆண்டுக்கால திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் எழுச்சி தேவை. மக்கள் எழுச்சி ஏற்பட்டால் அதற்கு வெளிநாடுகளில் இருப்பவர்கள் கூட பல கோடிகளைக் கொட்டித் தர தயாராக இருக்கிறார்கள். மக்கள் எழுச்சியுடன் புரட்சி செய்யும் போது நான் தலைமை தாங்க தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு ரஜினி கூறினார்.

You'r reading மக்கள் எழுச்சியால்தான் திமுக, அதிமுகவை தோற்கடிக்க முடியும்.. ரஜினி கருத்து Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை