தவ்ஹீத் ஜமாத் போராட்டத்தை அனுமதித்தது ஏன்? பாஜக கேள்வி..

by எஸ். எம். கணபதி, Mar 19, 2020, 16:03 PM IST

கொரோனா வைரஸ் பரவக் கூடிய நேரத்தில், தவ்ஹீத் ஜமாத் போராட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று அதிமுகவோ, திமுகவோ சொல்லாதது ஏன்? என்ற பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
கொரோனா தொற்று அதிகரிக்கக் கூடாது என்ற நோக்கில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை, விதிகளை, நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வணிக வளாகங்கள், திரை அரங்குகள், பெரிய கடைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட சொல்லி உத்தரவு பிறப்பித்தது நிலைமையின் தீவிரத்தை உணர்த்தியது. சில கடைகளைச் சீல் வைத்துப் பூட்டியது அரசு.

மிகக் கடுமையாகப் பொறுப்போடு இந்த நடவடிக்கைகளை எடுக்கும் தமிழக அரசு, தமிழகம் முழுவதும் 'தமிழக தவ்ஹீத் ஜமாத்'தின் போராட்டத்தை கை கட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்தது, அதிர்ச்சி மட்டுமல்ல. மிகப் பெரிய ஆபத்தும் கூட. பல நாட்களாக இந்த போராட்டத்திற்கான அறிவிப்பைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்த நிலையிலும் ஆளும் அதிமுகவோ, எதிர்க்கட்சியான திமுகவோ அந்த அமைப்பைக் கண்டித்து இந்த போராட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று சொல்லாதது ஏன்?
ஆயிரக்கணக்கானோர் கூடிய நிலையில் கொரோனா தொற்று கடுமையாகப் பரவியிருக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஒரே ஒருவருக்கு இருந்திருந்தால் கூட தமிழகம் முழுவதும் இது பரவ சாத்தியம் உண்டா, இல்லையா? மீண்டும் மீண்டும் வாக்கு வாங்கி அரசியலுக்காக மக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்வது மிகப் பெரிய கொடூரம் அல்லவா? எந்த அரசியல் கட்சியும் இது குறித்து வாய் திறக்க மறுப்பதேன்? கொரோனா தொற்று அவர்களிடம் சோதனை செய்யப்பட்டதா? பாதுகாப்புக்குச் சென்றிருந்த காவல்துறையினர் இதில் பாதிக்கப்பட்டிருந்தால் அது மிகப் பெரிய ஆபத்து அல்லவா?
இவ்வாறு நாராயணன் திருப்பதி கேட்டிருக்கிறார்.

READ MORE ABOUT :

Leave a reply